அரசு கலை கல்லூரிகளில் சேர விண்ணப்பித்த மாணவர்கள்

தஞ்சையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

Update: 2021-07-26 20:06 GMT
தஞ்சாவூர்:
தஞ்சையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
உதவி மையம்
கொரோனா காரணமாக கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கின்றன. நோய் தொற்றை கருத்தில் கொண்டு நடப்பு கல்வியாண்டில் அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவு கடந்த 19-ந் தேதி வெளியிடப்பட்டது.
இதனால் உயர்கல்வியில் சேருவதற்கு மாணவர்கள் தயாராக உள்ளனர். அந்த வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் பணி நேற்று தொடங்கியது. இணையதள மூலம் அரசு கலை கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டாலும் ஒவ்வொரு அரசு கல்லூரியிலும் உதவி மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பித்த மாணவர்கள்
அதன்படி தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி, குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி ஆகிய 2 கல்லூரிகளிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த உதவி மையத்தில் மூத்த பேராசிரியர், கணினி பேராசிரியர், பெண் பேராசிரியர் ஆகியோர் கொண்ட குழுவினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்நாளான நேற்று மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வந்து கல்லூரியில் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவில் சேர விண்ணப்பித்தனர். அதற்குரிய சான்றிதழ்களுடன் வந்த மாணவ, மாணவிகளுக்கு பேராசிரியர் குழுவினர் உதவி செய்தனர். மாணவர்கள் உதவி மையங்கள் மூலம் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கும் பணியை கல்லூரி முதல்வர் செந்தமிழ்ச்செல்வி, துணை முதல்வர் கோவிந்தராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
1,060 இடங்கள்
பின்னர் கல்லூரி முதல்வர் செந்தமிழ்ச்செல்வி கூறும்போது, மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் 13 துறைகள் உள்ளன. இவற்றில் 8 அறிவியல்துறைகளும், 5 கலை துறைகளும் ஆகும். முதலாம் ஆண்டில் 1,060 இடங்களை நிரப்ப மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கூடுதல் மாணவர்கள் வந்தாலும் அரசின் அனுமதி பெற்று 20 சதவீத இடங்களில் மாணவர்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்லூரியில் சேர விண்ணப்பிக்க அதிக மாணவர்கள் வந்தால் அவர்களுக்கு டோக்கன் வழங்கி, சமூக இடைவெளியை கடைபிடித்து மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடத்தப்படும். எங்கள் கல்லூரியில் மொத்தம் 4 ஆயிரத்து 100 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர் என்றார். இதேபோல் குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரிக்கு மாணவிகள் ஏராளமானோர் வந்து விண்ணப்பித்தனர்.

மேலும் செய்திகள்