ஜோக் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீர்; ஒரே நாளில் 13 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்

சாகர் அருகே உள்ள ஜோக் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து விழும் அழகை ஒரே நாளில் 13 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்.

Update: 2021-07-26 21:55 GMT
சிவமொக்கா:
  
ஜோக் நீர்வீழ்ச்சி

  சிவமொக்கா மாவட்டம் சாகர் அருகே உலக பிரசித்தி பெற்ற ஜோக் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் 4 கிளைகளாக தண்ணீர் பிரிந்து விழும். இந்த 4 கிளைகளுக்கும் ேராஜர், ராஜா, ராணி, ராக்கெட் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மலையில் இருந்து சுமார் 830 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து விழும் அழகு ரம்மியமாக இருக்கும்.

  இதனால் இந்த நீர்வீழ்ச்சியை பார்க்க உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். சுற்றுலா பயணிகளின் வருகையை முன்னிட்டு அங்கு ரோப்கார் வசதி ஏற்படுத்த கர்நாடக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்

  இந்த நிலையில் சிவமொக்கா மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அங்குள்ள ஷாரவதி, துங்கா ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜோக் நீர்வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

  பச்சை பசேல் மலையில் வெள்ளியை உருக்கிவிட்டது போல் 4 கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும் காட்சி கண்களுக்கு விருந்தளிக்கிறது. இதனால் ஜோக் நீர்வீழ்ச்சியை காண பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஜோக் நீர்வீழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

வாகன நெரிசல்

  இதன் காரணமாக ஜோக் நீர்வீழ்ச்சி பகுதிகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றனர். இதனால் வாகன நெரிசலும் ஏற்பட்டது. போலீசார் வாகன போக்குவரத்தை சரி செய்தனர். நேற்று முன்தினம் மட்டும் சுமார் 13 ஆயிரம் பேர் ஜோக் நீர்வீழ்ச்சியை கண்டுகளித்ததாக ஜோக்நீர்வீழ்ச்சி சுற்றுலா மேம்பாட்டு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  அதுபோல் சிவமொக்கா அருகே உள்ள சக்கரேபயலு யானைகள் பயிற்சி முகாமிற்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் யானைகளுக்கு கரும்பு, பழங்கள் கொடுத்து மகிழ்ந்தனர்.

வனவிலங்கு சபாரி

  மேலும் தியாவரேகொப்பா புலி மற்றும் சிங்கம் திறந்தவெளி சரணாலயத்திற்கும் மக்கள் படையெடுத்தனர். அங்கு வனத்துறை வாகனங்களில் அடர்ந்த காடுகளில் பயணித்து வனவிலங்குகளை கண்டுகளித்தனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,750 பயணிகள் சபாரி செய்து வனவிலங்குகளை கண்டு ரசித்ததாக வனத்துறையினர் கூறினர்.

மேலும் செய்திகள்