கூடலூர் சாலையின் நடுவில் இருந்து விலகி உள்ள தடுப்பு கற்கள்

கூடலூர் சாலையின் நடுவில் இருந்த தடுப்பு கற்கள் விலகி உள்ளன. சாலை ஒருபுறம் குறுகி, மறுபுறம் அகன்று இருப்பதால், உரிய நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2021-07-26 22:51 GMT
கூடலூர்

கூடலூர் சாலையின் நடுவில் இருந்த தடுப்பு கற்கள் விலகி உள்ளன. சாலை ஒருபுறம் குறுகி, மறுபுறம் அகன்று இருப்பதால், உரிய நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

தடுப்பு கற்கள்

தமிழகம், கேரளா, கர்நாடகா என 3 மாநிலங்கள் இணையும் இடத்தில் கூடலூர் பகுதி உள்ளது. இங்கு வாகன போக்குவரத்து மிகுந்து இருப்பது வழக்கம். மேலும் சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதை தவிர்க்க கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ராஜகோபாலபுரம் வரை நடுவில் தடுப்பு கற்களை வைத்தனர். ஏற்கனவே அகலம் குறைந்த சாலை என்பதால், தற்போது மேலும் அகலம் குறையும் வகையில் தடுப்பு கற்கள் வைத்ததால் அவசரத்துக்கு வாகனங்களை சாலையோரம் நிறுத்த இடமின்றி போனது. இதனால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

வாகன ஓட்டிகள் அவதி

இந்த நிலையில் சக்தி விநாயகர் கோவிலில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை அடையாள குறியீட்டில் இருந்து தடுப்பு கற்கள் விலகி உள்ளது. இதனால் சாலையின் ஒருபுறம் மிகவும் குறுகலாகவும், மறுபுறம் அகலமாகவும் மாறிவிட்டது. இதனால் வாகனங்களும் ஆமை வேகத்தில் செல்கின்றன.

குறிப்பாக ஆம்புலன்ஸ்களில்கூட நோயாளிகளை விரைவாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

போக்குவரத்துக்கு இடையூறு

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:- 
சமவெளியில் இட வசதி உள்ள சாலையின் நடுவில் வைப்பது போன்று இடவசதி இல்லாத கூடலூர் சாலையில் தடுப்பு கற்களை வைத்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. தற்போது சாலையின் ஒருபுறம் நோக்கி தடுப்பு கற்கள் விலகி செல்வதால் மறுபுறம் சாலை அகலமாகி உள்ளது. 

எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தடுப்பு கற்களை சாலையின் நடுவில் வரையப்பட்டு உள்ள அடையாள குறியீட்டில் நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்