விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-27 13:35 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

நூதன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் காதில் பூ வைத்து, நெற்றில் நாமம் போட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கடந்த 2020-ம் ஆண்டில் தென்பெண்ணை கிளை நதி மார்கண்டேய நதி மீது யார்கூல் என்கிற இடத்தில் அணை கட்டிய கர்நாடக அரசை கண்டித்தும், அதனை தடுக்க தவறிய தமிழக அரசையும் கண்டித்தும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது எடியூரப்பா என்று எழுதிய அட்டையை கழுத்தில் மாட்டி கொண்டிருந்த விவசாயி ஒருவரை மற்ற விவசாயிகள் சாட்டையால் அடிப்பது போன்று சித்தரித்து காண்பித்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. 

விவசாயிகளை கலந்து பேச வேண்டும்

பின்னர் விவசாயிகள் கூறியதாவது:-

2020-ல் கர்நாடகம் தென்பெண்ணை கிளை நதி மார்கண்டேய நதி மீது யார்கூல் என்கிற இடத்தில் அணை கட்டியது. அப்போது தமிழக அரசின் அலட்சிய போக்கு மற்றும் கண்காணிப்பு குழு செயல்படாததால் தென்பெண்ணை நீர் உரிமையை இழந்து விட்டது. இச்செயல்நதி நீர் ஒப்பந்தத்தை மீறிய செயலாகும்.

தற்போது 2021-ல் மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட முயல்கிறது. எனவே நதிநீர் பிரச்சினையில் பிரதமரை சந்திக்கும் போது தமிழக முதல்- அமைச்சர் தமிழக விவசாயிகளை கலந்து பேச வேண்டும்.

 யார்கூல் அணை பிரச்சினையால் தென்பெண்ணை- செய்யாறு, தென்பெண்ணை- பாலாறு, நந்தன் கால்வாய் இணைப்பு பாதிக்கும். 
இதனால் வடஆற்காடு, தென்னார்காடு மாவட்ட விவசாயம் மற்றும் குடிநீர் பாதிப்பு ஏற்படும். அதனால்  தமிழக அரசையும், கர்நாடக அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 

இவ்வாறு அவர்கள் கூறினர். 

பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

இதில் உழவர் பேரவையை சேர்ந்த புருஷோத்தமன், சிவா, ஆறுமுகம், பாண்டிதுரை, தென் இந்திய விவசாய சங்கத்தை சேர்ந்த கிருஷ்ணன், திராவிட விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த பழனிச்சாமி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்