அரசு பஸ்சுக்கு வழி விட்டபோது சாலையோர பள்ளத்தில் பாய்ந்த லாரி

கூடலூர்-கோழிக்கோடு சாலையில் அரசு பஸ்சுக்கு வழி விட்டபோது, சரக்கு லாரி சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-07-27 16:40 GMT
கூடலூர்,

கூடலூரில் இருந்து நேற்று காலை 8 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டு பந்தலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதேபோல் பந்தலூர் பகுதியில் இருந்து கூடலூர் நோக்கி சரக்கு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது நாடுகாணி பகுதியில் வந்தபோது அரசு பஸ்சும், சரக்கு லாரியும் வழிவிட முயன்றன.  

இந்த சமயத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இருப்பினும் லாரி டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு லாரியை கட்டுப்படுத்தினார். 

லாரி பள்ளத்தில் விழாமல் அந்தரத்தில் தொங்கியப்படி நின்றது. இதனால் பள்ளத்தில் இருந்த கிருஷ்ணசாமி வீட்டின் மீது லாரி விழவில்லை. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. 

இதேபோல் அரசு பஸ் இடதுபுறம் இருந்த மண் மேட்டில் மோதி நின்றது. இதில் பஸ்சின் முன்பகுதி சேதமடைந்தது. ஆனாலும் பயணிகள் காயமின்றி தப்பினர். லாரியும், பஸ்சும் நடுவழியில் நின்றதால் கூடலூர்-கோழிக்கோடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் சிக்கிய 2 வாகனங்களையும் மீட்டு, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தேவாலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்