லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்

மடத்துக்குளம் அருகே உள்ள செங்கண்டிப்புதூரில் புழுதி பறக்கும் சாலைகளால் அவதிப்பட்டு வருவதாகக் கூறி 12 லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-27 17:08 GMT
போடிப்பட்டி
மடத்துக்குளம் அருகே உள்ள செங்கண்டிப்புதூரில் புழுதி பறக்கும் சாலைகளால் அவதிப்பட்டு வருவதாகக் கூறி 12 லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நான்கு வழிச்சாலை
பொள்ளாச்சியிலிருந்து திண்டுக்கல் வரையிலான நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மடத்துக்குளம் பகுதியில் இதற்காக கையகப்படுத்தப்பட்ட விளைநிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கிராவல் மண் கொட்டப்பட்டு மேடாக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சாலைப்பணிகளுக்காக மடத்துக்குளத்தையடுத்த செங்கண்டிப்புதூர், மைவாடி உள்ளிட்ட கிராமப் பகுதிகள் வழியாக பெரிய அளவிலான லாரிகள் மூலம் கிராவல் மண் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் பல இடங்களில் சாலைகள் சேதமாகி மணல் பறப்பதால் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகக் கூறி நேற்று செங்கண்டிப்புதூர் நால்ரோடு பகுதியில் மண் ஏற்றி வந்த 12 லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலையில் சிதறும் மண்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது
நான்கு வழிச்சாலை அமைக்கப்படுவதற்குள் சுற்றுவட்டார பகுதியிலுள்ள ஏராளமான சாலைகள் காணாமல் போய் விடும் நிலை உள்ளது. அந்த அளவுக்கு இரவு பகலாக கனரக வாகனங்கள் இந்த வழியாக இயக்கப்படுகிறது. அதிக அளவு பாரத்துடன் பல மாதங்களாக தொடர்ச்சியாக இவ்வாறு வாகனங்கள் இயக்கப்படுவதால் பல இடங்களில் சாலை சேதமடைந்து பள்ளமும் மேடுமாக மாறிவிட்டது. மேலும் லாரிகளிலிருந்து சிதறும் மண் சாலையில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது. வாகனங்கள் இந்த பகுதியைக் கடக்கும்போது அதிக அளவில் புழுதி பறக்கிறது.
இதனால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் கண்ணில் தூசி விழுந்து தடுமாறி விபத்துக்குளாகும் நிலை உள்ளது.மேலும் கிராமங்களின் குறுகிய சாலைகளில் சிறுவர்கள் நடமாடவே அஞ்சுமளவுக்கு தொடர்ச்சியாக வாகனங்கள் அதிக வேகத்தில் இயக்கப்படுகிறது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு  அவர்கள் கூறினர்.உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கணியூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு லாரிகளை விடுவித்தனர்.

மேலும் செய்திகள்