seed test nessessary

விதை விற்பனையாளர்கள் தரப்பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று விதைப்பரிசோதனை அலுவலர் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2021-07-27 17:28 GMT
போடிப்பட்டி, ஜூலை.28-
விதை விற்பனையாளர்கள் தரப்பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று விதைப்பரிசோதனை அலுவலர் வலியுறுத்தியுள்ளார்.
ஆடிப்பட்டம்
உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் காய்கறிகள் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி செய்வதற்காக விதைகளை விதை விற்பனை நிலையங்களில் விவசாயிகள் வாங்கி வருகின்றனர். இதற்கென விற்பனையாளர்கள் விதைகளை வாங்கி விதை விற்பனை நிலையங்களில் இருப்பு வைத்துள்ளனர். இந்த விதைகள் தரமானவை தானா என்பதை விற்பனையாளர்கள் அறிந்து கொள்வது அவசியம் என்று கோவை விதை பரிசோதனை நிலைய அதிகாரி கணேசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
எந்த பயிராக இருந்தாலும் மகசூலை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக விதைகளே உள்ளன.எனவே விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும். விதைத் தரம் என்பது முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம் போன்றவற்றைப் பொறுத்து அமைகிறது.
விதை மாதிரி
தரமான விதைகளை விதைக்கும் போது பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்பட்டு மகசூல் அதிகரிக்கும். அதேநேரத்தில் தரமற்ற விதைகளால் மகசூல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும். எனவே விதை விற்பனையாளர்கள் தாங்கள் இருப்பு வைத்துள்ள காய்கறி விதைகளின் தரத்தை அறிந்து கொள்ள கோவை விதை பரிசோதனை நிலையத்துக்கு மாதிரிகளை அனுப்பி பரிசோதனை செய்து கொள்ளலாம். ஒரு மாதிரிக்கு பரிசோதனை கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படுகிறது.கேரட், பீட்ரூட், கொத்தவரை ஆகியவற்றுக்கு 50 கிராமும், முள்ளங்கிக்கு 30 கிராமும், கீரை வகைகளுக்கு 70 கிராமும் வெங்காயத்துக்கு 80 கிராமும், முட்டைகோஸ் மற்றும் காலிபிளவருக்கு 100 கிராமும் விதை மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்ப வேண்டும்.
விதைகள் என்பவை வெறும் விவசாயத்துக்கான மூலப்பொருள் மட்டுமல்ல விவசாயிகளின் வாழ்வாதாரம் என்பதை விற்பனையாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.தங்களிடம் உள்ள விதைகள் தரமானவை என்பதை உறுதி செய்துகொள்ள கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி விதை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.இதுதவிர விவசாயிகள் தாங்கள் இருப்பு வைத்துள்ள விதைகளையும் கோவை விதை பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்து கொள்ளலாம்.
இவ்வாறு  அவர் கூறினார்.

மேலும் செய்திகள்