பொள்ளாச்சி உழவர் சந்தை அருகில் திறந்தவெளியில் மது அருந்தும் கும்பல்

பொள்ளாச்சி உழவர் சந்தை அருகில் திறந்தவெளியில் மதுஅருந்தும் கும்பலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.

Update: 2021-07-27 17:41 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி உழவர் சந்தை அருகில் திறந்தவெளியில் மதுஅருந்தும் கும்பலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். 

மது அருந்தும் கும்பல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக மதுக்கடைகள் திறக்கப்பட்டும், பார்களை திறக்க அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் பொள்ளாச்சி உழவர் சந்தை ரோட்டில் 2 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு மது பாட்டிகளை வாங்கும் மதுபிரியர்கள், அதே பகுதியில் உழவர் சந்தை அருகில் திறந்தவெளியில் கும்பலாக அமர்ந்து மது அருந்துகின்றனர். பின்னர் டம்ளர், பாட்டில்களை அங்கேயே வீசி விட்டு செல்கின்றனர். 

பொதுமக்கள் அவதி 

மேலும் அதே பகுதியில் சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட தகாத செயல்களில் ஈடுபடுவதால் பெண்கள் முகம் சுழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். பட்டப்பகலில் மது அருந்தும் நபர்களால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். 

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

பொள்ளாச்சி வடுகபாளையம் பிரிவில் ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெறுவதால், உழவர் சந்தை ரோடு வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டு உள்ளன.

 இதன் காரணமாக அந்த பகுதியில் தினமும் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். 

பாதுகாப்பு இல்லை 

இங்கு திறந்தவெளியில் மது அருந்தும் கும்பல், அந்த வழியாக செல்லும் பெண்களை கேலி கிண்டல் செய்வது, தகாத வார்த்தையால் திட்டுவது தொடர்கதையாகி விட்டது. இதனால் பெண்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி உள்ளது.

எனவே பொது இடத்தில் திறந்தவெளியில் வைத்து மது அருந்தும் நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்