செல்போன் கோபுரத்தில் ஏறி பூசாரி போராட்டம்

விராலிமலை அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பூசாரி செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனிடையே பேச்சுவார்த்தையின் போது புகார் சொல்லப்பட்டவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-27 17:54 GMT
விராலிமலை, ஜூலை.28-
விராலிமலை அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பூசாரி செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனிடையே பேச்சுவார்த்தையின் போது புகார் சொல்லப்பட்டவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆக்கிரமிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, பொய்யாமணி அருகே பொத்தப்பட்டி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகே சுமார் 12 சென்ட் புறம்போக்கு நிலம் உள்ளது.
கோவில் திருவிழாவின் போது, நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக இந்த இடத்தை ஊர் பொதுமக்கள்  பயன்படுத்தி வந்துள்ளனர். இந்தநிலையில் அந்த இடத்தை அதே ஊரை சேர்ந்த பழனிவேல் மகன் சுதாகர் என்பவர் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கோவில் பூசாரி ராசு (வயது 65) மற்றும் ஊர்பொதுமக்கள் அந்த இடத்தை சுதாகர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அந்த ஆக்கிரமிப்பை அகற்றித்தருமாறு வருவாய்த்துறை மற்றும் விராலிமலை போலீசாரிடம் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் அந்த இடத்தில் சுதாகர் இரும்பு ஆஸ்பெட்டாஸ் சீட்டுகளைக் கொண்டு கொட்டகை அமைத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோவில் பூசாரி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மீண்டும் முறையிட்டுள்ளார்.
செல்போன் கோபுரத்தில் ஏறி...
அதன்பின்னரும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த கோவில் பூசாரி ராசு நேற்று காலை அருகே கொடும்பாளூர் சத்திரத்தில் உள்ள தனியார் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் எனவும் கூறினார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பூசாரி ராசுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து அவர் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார்.
தீக்குளிக்க முயற்சி
அதனைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு இடத்தை பார்வையிட பொத்தப்பட்டிக்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார்  சுதாகர் மற்றும் ஊர்பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையில் சுதாகர் வீட்டில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து வந்து குடும்பத்தினருடன் வீட்டின் அருகே அமர்ந்து தீக்குளிக்க முயன்றார்.
இதைக்கண்ட போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து போலீசார் இருதரப்பினரிடமும்  விராலிமலை தாலுகா அலுவலகத்தில் சமாதானக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தையடுத்து சுதாகர் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்