மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ

நெல்லை ராமையன்பட்டியில் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2021-07-27 19:46 GMT
நெல்லை:

நெல்லை ராமையன்பட்டியில் மாநகராட்சி குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இங்கு மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு சேமித்து வைக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள குப்பையில் நேற்று இரவு திடீரென்று ஒரு பகுதியில் லேசாக தீப்பற்றியது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென்று பரவி வேகமாக எரிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை, பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மாநகராட்சி ஊழியர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணி விடிய விடிய நடந்தது.

இந்த தீயால் ஏற்பட்ட புகை அந்த பகுதி முழுவதும் பரவியதால் சுற்றுப்பகுதி மக்கள் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டனர். நெல்லை -சங்கரன்கோவில் ரோட்டில் வாகனங்கள் புகை மண்டலத்துக்குள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
ராமையன்பட்டி குப்பை கிடங்கில் காற்று காலத்தில் தீப்பற்றி எரியும் சம்பவம் வாடிக்கையாக உள்ளது. இதை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த புகையால் சுற்றுப்பகுதி மக்களுக்கு நோய் பரவுகிறது. எனவே குப்பை கிடங்கில் தீப்பற்றாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்