போலீசாரின் வாரண்ட் படிவங்களை அரசு டவுன் பஸ்களில் ஏற்க மறுப்பு

டி.ஜி.பி. உத்தரவிட்டு இருந்தாலும் அரசு டவுன் பஸ்களில் போலீசாரின் வாரண்ட் படிவங்கள் ஏற்கப்படாததால் போலீசார் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2021-07-27 19:53 GMT
விருதுநகர், 
 டி.ஜி.பி. உத்தரவிட்டு இருந்தாலும் அரசு டவுன் பஸ்களில் போலீசாரின் வாரண்ட் படிவங்கள் ஏற்கப்படாததால் போலீசார் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உத்தரவு 
போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சமீபத்தில் போலீசார் சொந்த காரணங்களுக்காக பஸ்களில் செல்லும்போது பயணச்சீட்டு பெற்று பயணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
 பணியின் காரணமாக பஸ்களில் செல்லும்போது மட்டுமே வாரண்ட் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்தநிலையில் போலீசார் குறிப்பிட்ட இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பணிநிமித்தம் செல்லும் பொழுது புறநகர் பஸ்களின் வாரண்ட் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
வாக்குவாதம் 
ஆனால் சிறை கைதிகளை வெளியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து செல்லும்போது அரசு பஸ்களில் வாரண்ட் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.  உள்ளூரில் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த கைதிகளை அழைத்து செல்லும் பொழுது டவுன் பஸ்களில் பயணிக்க வேண்டி உள்ளது.
 ஆனால் டவுன் பஸ்களில் வாரண்ட் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. இதனால் போலீசாருக்கும், அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படும் நிலை உள்ளது. இந்தநிலையில் போலீசார் தங்களுக்கும், தாங்கள் அழைத்து செல்லும் பகுதிகளுக்கும் பயணச் சீட்டு பெற வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அவசியம்
இதற்கான செலவை போலீசாரே ஏற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே போலீஸ் நிர்வாகம் மற்றும் போக்குவரத்து கழக நிர்வாகம் இது தொடர்பாக கலந்தாய்வு செய்து போலீசார் பணி காரணமாக டவுன் பஸ்களில் பயணிக்கும் பொழுது அவர்களது வாரண்ட்  படிவங்களை போக்குவரத்து கழக ஊழியர்கள் ஏற்றுக் கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
 நடைமுறையில் அது சாத்தியப்படாவிட்டால் போலீசார் பயணத்திற்காக செலவழிக்கும் தொகையை போலீஸ் நிர்வாகம் உரிய ஆவணங்களை பெற்றுக்கொண்டு போலீசாருக்கு தர வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்