பஸ்சில் பயணியிடம் பணம் திருட முயன்ற பெண் பிடிபட்டார்

நாகர்கோவிலில் பஸ்சில் பயணியிடம் பணம் திருட முயன்ற பெண் பிடிபட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-07-27 20:20 GMT
நாகர்கோவில், 
நாகர்கோவிலில் பஸ்சில் பயணியிடம் பணம் திருட முயன்ற பெண் பிடிபட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருட முயற்சி
குமரி மாவட்டத்தில் பஸ்சில் பயணம் செய்யும் பெண்களிடம் நகை பறிப்பு மற்றும் பணம் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. அதிலும் தற்போது ஆடி மாதம் தொடங்கி உள்ளதால், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள அம்மன் கோவிலுக்கு செல்வதற்காக பெண் பக்தர்கள் பஸ்களில் பயணம் செய்தனர்.
அந்த வகையில் நேற்று ஆடி மாத 2-வது செவ்வாய்க்கிழமை என்பதால் அம்மன் கோவில்களுக்கு செல்ல பஸ் நிலையங்களில் பெண்கள் கூட்டம் அதிமாக இருந்தது. நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்திலும் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் அண்ணா பஸ் நிலையத்தில் ஆரல்வாய்மொழிக்கு புறப்பட்ட அரசு பஸ்சில் ஒரு பெண் பயணியின் கைப்பையை திறந்து அதில் இருந்த பணத்தை 2 பெண்கள் திருட முயன்றுள்ளனர்.
பிடிபட்டார்
அதை பார்த்த டிக்கெட் பரிசோதகர் உடனே ஒரு பெண்ணை பிடித்தார். உடன் இருந்த மற்றொரு பெண் தப்பி ஓடி விட்டார். அதைத் தொடர்ந்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பெண் போலீசார் அங்கு வந்தனர். அப்போது பிடிபட்ட பெண்ணை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு போலீசார் விசாரணை நடத்தியதில் பிடிபட்ட பெண் மதுரையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. ஆனால் அந்த பெண் தனக்கும் திருட்டு முயற்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், உடன் வந்த பெண் தான் திருட முயன்றார் என்றும் கூறினார். எனினும் போலீசார் அவரை விடவில்லை.
அதைத்தொடர்ந்து அந்த பெண்ணை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று அவருக்கு திருட்டு வழக்குகளில் தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய மற்றொரு பெண்ணையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்