கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அந்த கட்சியின் சட்டசபை கட்சி தலைவராக(முதல்-மந்திரியாக) பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பெங்களூருவில் கவர்னர் மாளிகையில் இன்று(புதன்கிழமை) நடைபெறும் விழாவில் புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவி ஏற்கிறார்.

Update: 2021-07-27 20:57 GMT
பெங்களூரு:

பதவி விலகினார்

  கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காததை அடுத்து தொங்கு சட்டசபை ஏற்பட்டது. 104 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாத காரணத்தால் எடியூரப்பா மூன்றே நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார்.

  அதனைதொடர்ந்து குமாரசாமி தலைமையில் அமைந்த காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு 14 மாதங்களில் கவிழ்ந்ததை அடுத்து எடியூரப்பா மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டதை அடுத்து அவர் பதவி விலகினார்.

எடியூரப்பாவின் ஒத்துழைப்பு

  எடியூரப்பாவுக்கு தற்போது 79 வயது ஆகிறது. வயது மூப்பு காரணமாக அவரை பா.ஜனதா மேலிடம் நீக்கியுள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் அடுத்த முதல்-மந்திரியாக யார்? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த எதிர்பார்ப்புக்கு இடையே கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங், துணை பொறுப்பாளர் அருணா ஆகியோர் நேற்று மதியம் விமானம் மூலம் பெங்களூரு வந்தனர்.

  மேலும் மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரிகள் தர்மேந்திர பிரதான், கிஷன்ரெட்டி ஆகியோரும் நேற்று மாலை பெங்களூரு வந்தனர். அவர்களில் தர்மேந்திர பிரதான் ஏற்கனவே கர்நாடக மாநில பா.ஜனதா மேலிட பொறுப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பசவராஜ் பொம்மை தேர்வு

  இந்தநிலையில் மேலிட பார்வையாளர்கள் முன்னிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நேற்று இரவு 7 மணியளவில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா, மேலிட பொறுப்பாளர் அருண்சிங், கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், மேலிட பார்வையாளர்கள் தர்மேந்திர பிரதான், கிஷன்ரெட்டி, தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி மற்றும் 90-க்கும் மேற்பட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இதில் கட்சியின் சட்டசபை குழு தலைவராக அதாவது புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். இதனை முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.

  அதன் பிறகு பசவராஜ் பொம்மை மேடைக்கு வந்து எடியூரப்பாவின் காலில் விழுந்து ஆசி பெற்றார். அவருக்கு எடியூரப்பா பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். அதே போல் மற்ற தலைவர்களும் பசவராஜ் பொம்மைக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து பசவராஜ் பொம்மை ராஜ்பவனுக்கு சென்று கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் வழங்கினார்.

பதவி ஏற்பு விழா

  அதை ஏற்றுக்கொண்ட கவர்னர் தாவர்சந்த் கெலாட், ஆட்சி அமைக்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து புதிய முதல்-மந்திரி பதவி ஏற்பு விழா இன்று(புதன்கிழமை) மதியம் 11 மணிக்கு பெங்களூருவில் உள்ள கவர்னர் மாளிகையில் நடக்கிறது. இதில் பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளார். அதைத்தொடர்ந்து புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா அடுத்த ஒரு வாரத்திற்குள் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.

  இந்த கூட்டம் முடிந்ததும் பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "கர்நாடக சட்டசபை பா.ஜனதா கட்சி தலைவராக என்னை ஒருமனதாக தேர்ந்து எடுத்துள்ளனர். இதற்காக எடியூரப்பா உள்பட கட்சி தலைவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் அனைவரையும் அரவணைத்து ஆட்சியை நடத்துவேன். எடியூரப்பா மேற்கொண்ட நல்ல பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வேன்" என்றார்.

மேலும் செய்திகள்