மங்களூருவில் சட்டவிரோதமாக தங்கிய இலங்கை தமிழர்களுக்கு விடுதலை புலிகளுடன் தொடர்பா? - தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை

மங்களூருவில் சட்டவிரோதமாக தங்கிய இலங்கை தமிழர்களுக்கு விடுதலை புலிகளுடன் தொடர்பு உள்ளதா? என்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

Update: 2021-07-27 21:07 GMT
மங்களூரு:

மங்களூருவில் சட்டவிரோதமாக...

  தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு மாநகர போலீசார் கடந்த ஜூன் மாதம் 10-ந் தேதி மங்களூரு அருகே வெவ்வேறு இடங்களில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த 38 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கையில் இருந்து தமிழகம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்ததும், பின்னர் அவர்கள் மங்களூருவுக்கு வந்து தங்கி கூலி வேலைகள் செய்து வந்ததும் தெரியவந்தது.

  மேலும் அவர்களை தமிழ்நாடு தூத்துக்குடியைச் சேர்ந்த ஏஜெண்டு ஒருவர் சட்டவிரோதமாக அழைத்து வந்து தங்க வைத்ததும், அவர்களை மங்களூருவில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைக்கு அனுப்ப திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. இதற்காக அவர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்து தலா ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அந்த ஏஜெண்டு வசூலித்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த 38 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்களை அழைத்து வந்த ஏஜெண்டை தேடி மங்களூரு போலீசார் தூத்துக்குடிக்கு சென்றனர்.

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்

  இந்த நிலையில் அந்த 38 பேரும் இலங்கையில் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதும், அவர்கள் அங்குள்ள தமிழர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதனால் இதுபற்றி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் மங்களூரு போலீசார் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் 38 பேரிடமும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

  இதையடுத்து இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து டெல்லியில் இருந்து மங்களூருவுக்கு வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து இவ்வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பெற்றுச்சென்றனர். தொடர்ந்து அவர்கள் இதுபற்றி விசாரணை தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்