மணல் கடத்திய 4 வாலிபர்கள் கைது; லாரி, ஆட்டோ பறிமுதல்

மணல் கடத்திய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து, லாரி, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Update: 2021-07-28 01:32 GMT
கொள்ளிடம் டோல்கேட்,

திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள தாளக்குடி பகுதியில் நேற்று கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்சி நோக்கி சந்தேகத்திற்குரிய வகையில் தார்ப்பாய் மூடியவாறு வந்த லாரி ஒன்றை நிறுத்தி அதன் டிரைவரான அல்லித்துறை அருகே மேலப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெருமாள் (வயது 22), கிளீனர் வண்ணாரப்பேட்டை திரு.வி.க. நகரைச் சேர்ந்த அர்ஜுன் (19) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
 விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதனையடுத்து போலீசார் லாரியை சோதனையிட்டபோது அதில் 2 யூனிட் மணலை வாளாடி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி அள்ளி வெளியூருக்கு விற்பனை செய்வதற்காக கடத்திவரப்பட்டது தெரியவந்தது.

 இதனைத் தொடர்ந்து டிரைவர் பெருமாள், கிளீனர் அர்ஜுன் ஆகிய 2 பேரின் மீது கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி டவுன் மற்றும் தேவதானம் பகுதி கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணப்பிரியா நேற்று திருச்சி ஓடத்துறை பகுதியிலுள்ள காவிரி ஆற்றங்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில், காவிரி ஆற்றிலிருந்து 5 மணல் மூட்டைகளை ஒரு ஆட்டோவில் வைத்து 2 பேர் கடத்தினர். 
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தேவதானம் பகுதியை சேர்ந்த அருண்பிரசாத்(வயது 34), ராஜீவ்காந்திநகரை சேர்ந்த சரவணக்குமார் (30) ஆகியோரை கோட்டை போலீசார் கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்