பெண் வக்கீல் மகளுடன் தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது

கும்மிடிப்பூண்டி அருகே பெண் வக்கீல் தனது மகளுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உருக்கமான கடிதம் சிக்கியது.

Update: 2021-07-28 04:00 GMT
சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பூவளம்பேடு பகுதியில் உள்ள திடீர் நகரில் கடந்த 1½ ஆண்டுகளாக வாடகை வீட்டில் தனது மகள் சிவரஞ்சினியுடன் (வயது 24) வசித்து வந்தவர் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த கீதாஞ்சலி (52). சென்னை ஐகோர்ட்டு பார் கவுன்சிலில் கீதாஞ்சலி பதிவு செய்து வக்கீல் பணி செய்து வந்தார். கீதாஞ்சலியின் கணவர் ராமு. ஆந்திர மாநிலம் சத்யவேடு பகுதியை சேர்ந்தவர். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகள் சிவரஞ்சினி பட்டதாரி ஆவார்.

இந்தநிலையில், சென்னையில் உள்ள உறவினர்களை விட்டு பிரிந்து தனது மகளுடன் வசித்து வந்த வக்கீல் கீதாஞ்சலி பல்வேறு பிரச்சினைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே நேற்று முன்தினம் கீதாஞ்சலியின் வீட்டுக்கு வந்த அவரது தங்கை ராஜீ, கதவு திறக்கப்படாததை கண்டும், கீதாஞ்சலி செல்போனை எடுக்காததை அறிந்தும் பதற்றம் அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் மாடி கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது, தாயும், மகளும் ஒரே மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

கடிதம் சிக்கியது

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருவரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக கீதாஞ்சலி எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் கூறியிருந்ததாவது:-

நாங்கள் வாழ தகுதி அற்றவர்கள். மன்னியுங்கள். நாங்கள் வாழ்வதற்கும் பணம் இல்லாமல் அவதிப்பட்டோம். எங்களை ஆதரிக்க யாரும் இல்லாததால் தான் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். எல்லாவற்றுக்கும் நல்ல குடும்ப வாழ்க்கை அமைய வில்லையென்றால் இந்த துன்பம் தான் நேரிடும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து கீதாஞ்சலியின் தங்கை கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்