அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற அரசு பஸ்சுக்கு அபராதம்

கொரோனா விதிமுறையை மீறி அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற அரசு பஸ்சுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-07-28 16:53 GMT
வளவனூர், 

கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பஸ்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பஸ்கள் இயக்கப்படுகிறதா என்று நேற்று விழுப்புரம் பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் தலைமையில் தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், தேர்தல் துணை தாசில்தார் வெங்கட்ராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கிச்சென்ற அரசு பஸ்சை, கோலியனூர் கூட்டுசாலை அருகில் நிறுத்தி சோதனை செய்ததில் அந்த பஸ்சில் கொரோனா பாதுகாப்பு விதியை மீறி 56 பயணிகள் பயணம் செய்தனர். அவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை. இதையடுத்து அந்த பஸ்சின் டிரைவர், கண்டக்டரை அதிகாரிகள் எச்சரித்ததோடு அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு ரூ.500-ஐ அபராதமாக விதித்தனர். இதேபோல் பிரம்மதேசம் அருகே உள்ள சிறுவாடி ஊராட்சியில் முக கவசம் அணியாமல் சென்ற 40 பேருக்கு மரக்காணம் தனி தாசில்தார் சுந்தர்ராஜன் தலைமையிலான அதிகாரிகள் அபராதம் விதித்தனர். 

மேலும் செய்திகள்