தி.மு.க.வை கண்டித்து 120 இடங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டத்தில் தி.மு.க.வை கண்டித்து 120 இடங்களில் அ.தி. மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-07-28 16:57 GMT
தேனி:

ரவிந்திரநாத் எம்.பி.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அ.தி. மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி தேனி நகர் பெரியகுளம் சாலையில், தேசியமயமாக்கப்பட்ட வங்கி எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். 

இதில், தேனி எம்.பி. ஓ.ப.ரவீந்திரநாத் கலந்துகொண்டு பேசினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், குடும்ப தலைவிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

போடி, பெரியகுளம்

போடி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், போடி அருகே குரங்கணி மலை கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஜெயலலிதா பேரவை மாவட்ட பொருளாளர் குறிஞ்சிமணி தலைமை தாங்கினார். 

இதில் கொட்டக்குடி ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி செயலாளர் ரவி, குரங்கணி கிளை செயலாளர் மகாராஜன், கொட்டக்குடி கிளை செயலாளர் அய்யப்பன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உள்பட அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பெரியகுளத்தில் உள்ள தேனி எம்.பி. அலுவலகம் முன்பு, நகர அ.தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ரவீந்திரநாத் எம்.பி. தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் ராதா, துணைச்செயலாளர் அப்துல் சமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் நாராயணன், நகர கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அன்பு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் முத்துவேல்பாண்டியன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டு தி.மு.க.வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

கம்பம், உத்தமபாளையம்

கம்பம் அருகே புதுப்பட்டியில், முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன் தலைமையில் அவரது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே அ.தி.மு.க. நகர செயலாளர் ஜெகதீஸ் தலைமையிலும், நாராயணத் தேவன்பட்டியில் கம்பம் ஒன்றிய துணை செயலாளர் கணேசன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல் உத்தமபாளையம் ஒன்றிய பகுதிகளில் அ.தி.மு.க.வினர் தங்களின் வீடுகள் முன்பு நின்றவாறு தி.மு.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

உத்தமபாளையத்தில் ஒன்றிய செயலாளர் அழகுராஜா தலைமையில் அவரது வீட்டு முன்பு நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ஜான்சி வாஞ்சிநாதன் தலைமையில், அ.தி.மு.க.வினர் நாகையகவுண்டன்பட்டியில் அவரது வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

120 இடங்களில் ஆர்ப்பாட்டம்

தேவதானப்பட்டி, ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு, கூடலூர் உள்பட மாவட்டம் முழுவதும் 120 இடங்களில் அ.தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்