தொழிலாளி கிணற்றில் தள்ளி கொலை

நெல்லை அருகே மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய உறவினரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-28 20:16 GMT
இட்டமொழி:
நெல்லை அருகே மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய உறவினரை போலீசார் கைது செய்தனர்.

உறவினர்கள்

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டி சந்தை தெருவை சேர்ந்தவர் ஆறுமுகதேவர் மகன் ராமர் (வயது 36), கூலித்தொழிலாளி. இவருக்கு தங்கம்மாள் (32) என்ற மனைவியும், முத்துப்பாண்டி (12) என்ற மகனும், ஆனந்தி (வயது 8) என்ற மகளும் உள்ளனர்.
அதே தெருவை சேர்ந்தவர் சுடலை (47), இவரும் கூலித்தொழிலாளி ஆவார். 

ராமரும், சுடலையும் உறவினர்கள். இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்தது. வேலைக்கு சென்று விட்டு மாலையில் இருவரும் சேர்ந்து மது அருந்துவது வழக்கம்.

தகராறு

இதேபோல் நேற்று முன்தினம் இருவரும் முனைஞ்சிப்பட்டி பேச்சியம்மன் கோவில் அருகே உள்ள கிணறு பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது சுடலை, ராமரிடம் அவர் வைத்திருந்த மது பாட்டிலை கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.

வாக்குவாதம் முற்றியதில் இருவருக்கும் தகராறு, கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் ராமர் அங்கிருந்த கிணற்று சுவர் மீது ஏறி அமர்ந்தார். அப்போது ஆத்திரமடைந்த சுடலை பாய்ந்து சென்று ராமரின் இரண்டு கால்களையும் பிடித்து தூக்கி கிணற்றுக்குள் தள்ளியதாக கூறப்படுகிறது.

கைது

இதனால் கிணற்று சுவரில் மோதி படுகாயமடைந்த ராமர் தண்ணீரில் விழுந்து மூழ்கி விட்டார். இதை அறிந்த சிலர் அங்கு வந்து கிணற்றுக்குள் விழுந்த ராமரை காப்பாற்ற சத்தம் போட்டனர். இதை கேட்டதும் தற்செயலாக அந்தப் பகுதிக்கு ரோந்து வந்த மூலைக்கரைப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார், என்ன பிரச்சினை என்று கேட்டு விசாரித்துள்ளார்.

அப்போது சுடலை, ராமரை கிணற்றுக்குள் தள்ளி விட்டது தெரியவந்தது. உடனடியாக போலீசார் சுடலையை கைது செய்தனர்.

உடல் மீட்பு

இதற்கிடையே, நாங்குநேரியில் இருந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். கிணற்று தண்ணீரை மோட்டார் மூலம் வடிய வைத்து தேடினர். அப்போது ராமர் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவருடைய உடலை கிணற்றில் இருந்து மீட்டனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், கைது செய்யப்பட்டுள்ள சுடலையிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளி கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்