லஞ்ச ஒழிப்பு போலீசாருடன் இணைந்து வணிகவரித் துறை அலுவலகங்களில் திடீர் சோதனை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

லஞ்ச ஒழிப்பு போலீசாருடன் இணைந்து வணிகவரித் துறை அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தி, லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகவரித் துறை முதன்மை செயலாளருக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2021-07-29 00:16 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் சேலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘டி.கோவிந்தராஜன் என்பவரிடம் இருந்து 2006-ம் ஆண்டு சொத்து வாங்கினேன். அவர் 2000-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை அரசுக்கு விற்பனைவரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளார். அதற்காக, அவரிடம் இருந்து நான் வாங்கிய சொத்து கையகப்படுத்தப்படும் என்று வணிகவரித் துறை சேலம் உதவி ஆணையர் 2012-ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்து, பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

2000-ம் ஆண்டு வசூலிக்கவேண்டிய விற்பனை வரிக்கு 2012-ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதுவும் மனுதாரர் சொத்து வாங்கி 6 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வருவாய் இழப்பு

ஆனால் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், 2006-ம் ஆண்டு முதல் கோவிந்தராஜனுக்கு பல நோட்டீசுகள் அனுப்பியும் அவர் பதில் அளிக்க வில்லை. அதனால் இப்போது சொத்தை கையகப்படுத்த உதவி ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்று கூறினார். ஆனால் வணிகவரிச் சட்டத்தில் வரி பாக்கித் தொகையை வசூலிக்க கால நிர்ணயம் உள்ளது. அதன்படி உதவி ஆணையர் செயல்படவில்லை.

எனவே, அவர் பிறப்பித்த நோட்டீசை ரத்து செய்கிறேன். வரி வருமானம் என்பது மாநில அரசுக்கு மிகவும் முக்கியமானது ஆகும். வரியை முறையாக வசூலிக்காமல் அஜாக்கிரதையாக செயல்பட்டு, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திடீர் சோதனை

வணிகவரித் துறையில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதிகாரிகள், தொழிலதிபர்களிடம் அன்பளிப்புகளை பெற்று அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துகின்றனர்.

எனவே, வணிகவரித் துறை முதன்மைச் செயலாளர், ஆணையர் ஆகியோர் தமிழகம் முழுவதும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வரி பாக்கியை வசூலிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய காலத்துக்குள் வரியை வசூலிக்காத அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை உள்ளிட்ட சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும், தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாருடன் கூட்டாக செயல்பட்டு, வணிகவரித் துறை அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்த வேண்டும். அப்போது, லஞ்சம், அன்பளிப்பு பெற்ற அதிகாரிகளை கையும் களவுமாக பிடித்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சொத்து குவிப்பு

மேலும், வணிகவரித் துறை அதிகாரிகளின் பணி பதிவேட்டை சரிபார்த்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள அவர்களது சொத்துகள், தற்போது அந்த அதிகாரிகள் பெயரிலும், அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலும் உள்ள சொத்துகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். இதில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்