திருச்சியில் 2-ம் நிலை காவலர் பணிக்கான தேர்வு: 3 நாட்களில் 315 பேர் வரவில்லை ஆர்வமாக வந்தவர்களில் சிலருக்கு, உடல்தகுதி இல்லாததால் ஏமாற்றம்

திருச்சியில் நடந்து வரும் 2-ம் நிலை காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வுக்கு 3 நாட்களில் 315 பேர் வரவில்லை. ஆர்வமாக வந்த சிலர், உடல்தகுதியின்றி வெளியேறியதால் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2021-07-29 01:30 GMT
திருச்சி, 
திருச்சியில் நடந்து வரும் 2-ம் நிலை காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வுக்கு 3 நாட்களில் 315 பேர் வரவில்லை. ஆர்வமாக வந்த சிலர், உடல்தகுதியின்றி வெளியேறியதால் ஏமாற்றம் அடைந்தனர்.

உடல் தகுதித்தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020-ம் ஆண்டுக்கான 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு பணி காலியிடங்களுக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற திருச்சி, கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆண், பெண் என 3,210 பேருக்கான உடல் தகுதித்தேர்வு திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடந்து வருகிறது. 

தினமும் 500 பேர் வீதம் இளைஞர்கள் அழைக்கப்பட்டு உடல் தகுதி தேர்வு தமிழ்நாடு சீருடை பணியாளர் துணைக்குழுவின் தலைவரும் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுமான  பா.மூர்த்தி முன்னிலையில் நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று 3-வது நாளாக உடல் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண், உடல்தகுதி தேர்வினை நேரில் ஆய்வு செய்தார். தினமும் 500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் பலர் வரவில்லை என்றும், போலீஸ் பணியில் சேர ஆர்வமாக வருபவர்கள் சிலருக்கு உயரம் மற்றும் மார்பளவு நிர்ணயிக்கப்பட்ட அளவீடுக்கு இல்லாமல் ஏமாற்றம் அடைந்தனர். 

மீண்டும் தேர்வு

அவர்களில் சிலர் மீண்டும் அப்பீல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. வெளியேறிய இளைஞர்கள் பலர் மீண்டும் சிலர் தேர்வு செய்யப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள், போலீஸ் பணியில் சேர்ந்து விட்டதைபோல அங்கிருந்த அதிகாரிகளுக்கு ராயல் சல்யூட் அடித்தனர்.

இது குறித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் துணைக்குழுவின் தலைவரும் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுமான  பா.மூர்த்தி கூறியதாவது:-

315 பேர் வரவில்லை

உடல் தகுதி தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட 1,500 பேரில் 315 பேர் பங்கேற்கவில்லை. 3 நாட்களில் மொத்தம் 901 போ் தகுதி பெற்றனர். உடல் தகுதி தேர்வில் மார்பளவு, உயரத்தில் பலர் தகுதி இழந்து வெளியேறி உள்ளனர். ஆனாலும் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு உடல்தகுதி சரிபார்ப்பு நடத்தப்பட்டது. 20 பேருக்கு சுமார் 4 அல்லது 5 பேர் மீண்டும் தகுதி பெற்று இருக்கிறார்கள். 

ஆகஸ்டு 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறையாகும் 2-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு நடக்கிறது. இதில் 1,005 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரு திருநங்கையும் அடங்குவார். மேலும் உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு மீண்டும் ஆகஸ்டு 4-ந் தேதி முதல் கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்