காரைக்காலில் இருந்து கும்பகோணத்துக்கு சரக்கு வேனில் ரூ.3½ லட்சம் போலி மது பாட்டில்கள் கடத்தல் - டிரைவர் கைது

காரைக்காலில் இருந்து கும்பகோணத்துக்கு சரக்கு வேனில் ரூ.3½ லட்சம் போலி மதுபாட்டில்களை கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-29 13:14 GMT
நாகப்பட்டினம்,

புதுச்சேரி மாநிலத்தில் போலியாக மதுபானங்கள் தயாரித்து அதை தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்வதற்காக காரைக்காலில் இருந்து வாகனங்களில் கடத்தப்படுவதாக நாகை மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தியாகராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் நாகை அருகே திருமருகல் பாலத்தடியில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது சரக்கு வேனில் 70 அட்டை பெட்டிகளில் 3 ஆயிரத்து 360 குவார்ட்டர் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சரக்கு வேனை ஓட்டி வந்த டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் காரைக்கால் தருமபுரம் தெற்கு தெருவை சேர்ந்த ராஜேஷ் (வயது32) என்பது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்வதற்காக காரைக்கால் பகுதியில் போலியாக மதுபானம் தயாரித்து அதை பாட்டில்களில் அடைத்து கும்பகோணத்துக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள போலி மது பாட்டில்கள் மற்றும் சரக்கு வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து டிரைவர் ராஜேசை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்