ஊட்டியில் வறுமையால் குழந்தைகளை விற்ற பெற்றோர் கைது

ஊட்டியில் வறுமையால் குழந்தைகளை விற்ற பெற்றோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இடைத்தரகர்கள் உள்பட 4 பேரும் சிக்கினர்.

Update: 2021-07-29 16:13 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள காந்தல் கஸ்தூரிபாய் காலனியை சேர்ந்தவர் ராபின்(வயது 29). டிரைவர். இவருடைய மனைவி மோனிஷா(24). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை இருந்தது. இந்தநிலையில் 3 குழந்தைகளையும் கவனிக்க முடியாததால் வர்ஷா(3) என்ற முதல் பெண் குழந்தையை மோனிஷா தனது அக்காள் பிரவீனாவின் பராமரிப்பில் விட்டு இருந்தார்.

மற்ற 2 குழந்தைகளை குடும்ப சூழ்நிலை காரணமாக சட்டத்துக்கு விரோதமாக தத்து கொடுத்துவிட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது பரூக் (51) என்பவருக்கு 2 வயது பெண் குழந்தையை ரூ.25 ஆயிரத்துக்கும், சேலம் மாவட்டம் குண்டுக்கல்லூர் பகுதியை சேர்ந்த உமா மகேஸ்வரி (37) என்பவருக்கு ஆண் குழந்தையை ரூ.30 ஆயிரத்துக்கும் தத்து கொடுப்பதாக கூறி விற்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

உடனடியாக போலீசார் தனிப்படை அமைத்து திருப்பூர், சேலத்தில் விற்கப்பட்ட 2 குழந்தைகளையும் மீட்டனர். மேலும் குழந்தைகளை வாங்கியவர்களை ஊட்டிக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பிரபு, சமூக நல அலுவலர் தேவகுமாரி, ஊட்டி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் ஆகியோர் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக 2 குழந்தைகளை பணத்துக்காக விற்றதை ராபின் மற்றும் மோனிஷா ஆகியோர் ஒப்புக்கொண்டனர். இதில் காந்தலை சேர்ந்த டிரைவர்கள் கமல் (30), பரூக் (35) ஆகியோர் இடைத்தரகர்களாக செயல்பட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக ராபின், மோனிஷா, கமல், பரூக்,  முகமது பரூக், உமா மகேஸ்வரி ஆகிய 6 பேர் மீது சட்டத்துக்கு விரோதமாக குழந்தைகளை விற்றது, பணம் கொடுத்து வாங்கியது, உடந்தையாக இருந்தது என 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். 

தொடர்ந்து அவர்கள் ஊட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தம்பதியின் 3 குழந்தைகளில் 2 பெண் குழந்தைகள் காப்பகத்திலும், 3 மாதமே ஆன ஆண் குழந்தை ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையிலும் பராமரிக்கப்பட உள்ளது. இந்த சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்