சுடுகாட்டுப் பாதை பிரச்சினை: தனிநபர் தோண்டிய பள்ளத்தை மூடிய கிராம மக்கள் திண்டிவனம் அருகே பரபரப்பு

சுடுகாட்டுப் பாதை பிரச்சினை தொடா்பாக தனிநபர் தோண்டிய பள்ளத்தை கிராம மக்கள் மூடினா்.

Update: 2021-07-29 16:40 GMT
திண்டிவனம், 

திண்டிவனம் அடுத்த கருவம்பாக்கம் ஊராட்சியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராத்தில் யாரேனும் உயிரிழந்தால், உடலை, அந்த பகுதியில் உள்ள தனிநபர் ஒருவரின் நிலத்தின் வழியாக சுடுகாட்டுக்கு எடுத்து சென்று வந்துள்ளனர். 

இந்த நிலையில் தனது நிலத்தின் வழியாக உடலை எடுத்து செல்லக்கூடாது என்று தனிநபர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அந்த பாதையை சுடுகாட்டு பாதையாக மாற்றித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தாசில்தார், சப்-கலெக்டர், மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

இந்த பிரச்சினை நீண்ட நெடுங்காலமாக நீடித்து வருகிறது. இதற்கிடையே, நேற்று நிலத்தின் உரிமையாளர், கிராம மக்கள் பாதையாக பயன்படுத்தி வந்த பகுதியில் பள்ளம் தோண்டினார். 

இதையறிந்த அந்த பகுதி மக்கள், இனி அந்த பகுதியை பாதையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்று கருதி அங்கு திரண்டு சென்றனர். தொடர்ந்து, அவர்கள் அந்த பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட்டனர்.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர் மூர்த்தி, தாசில்தார் செல்வம் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில், இது தொடர்பாக அதிகாரியிடம் மனு அளியுங்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவித்தனர். 

இதையடுத்து, அப்பகுதி மக்கள் திண்டிவனம் சப்-கலெக்டர் அமித்திடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். 

மேலும் செய்திகள்