விஷ வண்டுகள் கடித்து மாற்றுத்திறனாளி சாவு

கரூர் செட்டிப்பாளையம் தடுப்பணை அருகே விஷ வண்டுகள் கடித்து மாற்றுத்திறனாளி பரிதாபமாக இறந்தார். மேலும் காயம் அடைந்த 20 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2021-07-29 18:53 GMT
கரூர்
விஷவண்டுகள் 
கரூர் அருகே செட்டிப்பாளையம் பகுதியில் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள செட்டிப்பாளையம் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை அருகே உள்ள பூங்காவை சீரமைக்கும் பணியில் நேற்று காலை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணியாளர்கள் 71 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு வேப்பமரத்தில் கூடு கட்டியிருந்த விஷவண்டுகள் பறந்து வந்து பணி செய்து கொண்டிருந்தவர்களை துரத்தி, துரத்தி கடித்தன. இதனால் அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
அப்போது அங்கு பணி செய்து கொண்டிருந்த கரூர் ெரட்டிப்பாளையத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி கார்த்தி (வயது 47) என்பவர் ஓடமுடியாமல் விஷவண்டுகள் நடுவே சிக்கினார். இதனால் விஷவண்டுகள் கார்த்தியை சூழ்ந்து கடித்துள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் துடித்த அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். 
தீ வைத்து அழிப்பு
இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்த மாற்றுத்திறனாளி கார்த்தி மற்றும் 20 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விஷவண்டுகள் மற்றும் அதன் கூடுகளை தீயணைப்பு வீரர்கள் தீ வைத்து அழித்தனர்.
மாற்றுத்திறனாளி சாவு
இந்தநிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  மாற்றுத்திறனாளி கார்த்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மற்ற 20 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். விஷவண்டுகள் கடித்து மாற்றுத்திறனாளி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்