மேகதாது விவகாரம் குறித்து கர்நாடக முதல்-மந்திரி பேச்சு: டாக்டர் ராமதாஸ் கண்டனம்

மேகதாது விவகாரம் குறித்து கர்நாடக முதல்-மந்திரி பேச்சு: டாக்டர் ராமதாஸ் கண்டனம்.

Update: 2021-07-29 22:49 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக பதவியேற்றுக்கொண்ட பிறகு ஊடகங்களுக்கு அளித்த முதல் பேட்டியிலேயே, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கர்நாடக அரசு கட்டியே தீரும்; அதற்கு அனுமதி பெறுவதற்காக மத்திய நீர்வளத்துறை மந்திரியை ஓரிரு நாட்களில் சந்திக்கவிருக்கிறேன் என்று பசவராஜ் பொம்மை கூறியிருக்கிறார். புதிய முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற ஒருவர், தமிழகத்துடனான உறவை வலுப்படுத்த முயல்வதற்கு மாறாக சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

மேகதாது அணை விவகாரத்தில் இனிவரும் நாட்களில் எந்த நேரமும் திருப்பங்கள் நிகழ வாய்ப்புண்டு. இதைக் கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் தமிழக அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும்.

காவிரி விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆலோசனைகளை வழங்க காவிரி தொழில்நுட்பக் குழு என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டதைப் போல, மேகதாது விவகாரத்தை விழிப்புடன் கண்காணிக்கவும், ஆலோசனைகளை வழங்கவும் நீர் மேலாண்மையில் வல்லமை பெற்ற அதிகாரி ஒருவர் தலைமையில் குழு ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும். இதை உடனடியாக செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மேகதாது விவகாரம், நீர் மேலாண்மைத் திட்டங்கள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்துவதற்கு வசதியாக நீர்வளத்துறைக்கு தனிச் செயலாளர் ஒருவரை தமிழக அரசு நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்