தவறான ஊசியால் இளம்பெண் சாவு: சுகாதாரத்துறை இயக்குனர் விளக்கம் அளிக்க வேண்டும்

தவறான ஊசியால் இளம்பெண் சாவு: சுகாதாரத்துறை இயக்குனர் விளக்கம் அளிக்க வேண்டும் மனித உரிமை ஆணையம் உத்தரவு.

Update: 2021-07-30 03:13 GMT
சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் களக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி வனிதா (வயது 26) என்பவர் கடந்த 22-ந் தேதி பிரசவத்துக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் 3 நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், வனிதா ஆஸ்பத்திரியிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில், செவிலியர் மணிமாலா என்பவர் செலுத்திய தவறான ஊசியால், வனிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் சுய நினைவை இழந்தார். இதைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட வனிதா, சிகிச்சை பலனின்றி 27-ந் தேதி உயிரிழந்தார்.

வனிதாவின் இறப்புக்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

இதுதொடர்பாக நேற்று முன்தினம் தினத்தந்தியில் வெளியான செய்தியை மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தார்.

பின்னர், இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் தனது விளக்கத்தை 2 வாரத்துக்குள் விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்