தேசிய ஊரக வேலை திட்ட பணிகள் முறையாக வழங்கவில்லை என்று கூறி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

தேசிய ஊரக வேலை திட்ட பணிகள் முறையாக வழங்கவில்லை என்று கூறி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-30 06:29 GMT
பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் தாராட்சி ஊராட்சி மன்ற தலைவராக சிவகாமி பதவி வகித்து வருகிறார். இந்த ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 250-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பணிபுரிந்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 3 வார காலமாக 75-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு முறையாக பணிகள் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பணித்தள பொறுப்பாளரை கேட்டபோது ஊராட்சிமன்ற தலைவரிடம் கேளுங்கள் அவரது அறிவுறுத்தலின் படிதான் பணி வழங்குவதாக கூறியதாக தெரிகிறது.

முற்றுகை

இந்த நிலையில் நேற்று எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஏராளமான கிராம மக்கள் முற்றுகையிட்டும், அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு முறையாக பணி வழங்க வேண்டும். ஊராட்சி நிர்வாகத்தில் பெண் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தலையீட்டை தடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகனை வலியுறுத்தினர்.

பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலினை சந்தித்து தங்களது கோரிக்கையை நிறைவேற்றுமாறு கூறினர். பொதுமக்களின் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி கூறினார். அதன் பின்னர், பொதுமக்கள் தங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த கட்டமாக சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடப்போவதாக அறிவித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்