மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் தேசிய கடல் மீன்வள மசோதாவை திரும்பப்பெற வேண்டும்

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் தேசிய கடல் மீன்வள மசோதாவை திரும்பப்பெற வேண்டும் தமிழ்நாடு-புதுச்சேரி மீனவர் பேரமைப்பு வலியுறுத்தல்.

Update: 2021-08-01 11:06 GMT
சென்னை,

தமிழ்நாடு-புதுச்சேரி மீனவர் பேரமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெ.கோசுமணி, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு, இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே தேசிய கடல் மீன்வள மசோதாவை கொண்டுவர உள்ளது. இந்த மசோதா மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், மீன்பிடி உரிமைகளையும் பறிக்கும் சட்டமாகும்.

மீனவர்களுக்கு உரிமம் கட்டாயம், கட்டணம் செலுத்தி மீன்பிடிக்கும் முறை, 12 நாட்டிக்கல் மைல் தொலைவுக்குள்ளாகவே மீன்பிடிக்க வேண்டும் என்ற வரையறை, 12 முதல் 200 நாட்டிக்கல் மைல் தொலைவுகளில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி, மீன்பிடிக்கும் அளவையும் வரையறைப்படுத்துவதும், கடலுக்கு கொண்டு செல்லும் உபகரணங்களை கணக்கிடுவது மற்றும் ஆய்வு செய்வது என அடுக்கடுக்கான விஷயங்கள் இச்சட்டத்தின்மூலம் நிறைவேற்றப்பட உள்ளன. இவை நிறைவேற்றப்பட்டால் மீனவர்களின் வாழ்க்கையே நிச்சயம் கேள்விக்குறியாகும்.

எனவே மீனவர்களின் நலன் காக்க, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் தேசிய கடல் மீன்வள மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்