மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு: மோடிக்கு நன்றி தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அறிவித்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2021-08-01 12:52 GMT
சென்னை,

மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

நன்றி-பாராட்டு

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்ற வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்து, தமிழக மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக என்னுடைய மகிழ்ச்சியையும், நன்றியையும், பாராட்டுதல்களையும் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இடஒதுக்கீடு, நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்பது வரவேற்கத்தகுந்த நடவடிக்கை ஆகும்.

இந்த புரட்சிகரமான நடவடிக்கை மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான பயனை பெறுவார்கள். மேலும் இந்தியாவில் சமூகநீதிக்கு புதிய வடிவத்தை கொடுப்பதாகவும் இது அமையும். 27 சதவீத இடஒதுக்கீடு அறிவித்திருப்பது, பிற்படுத்தப்பட்டோர் நலனில் உங்களுக்கு உள்ள அக்கறையையும், அர்ப்பணிப்பையும் பிரதிபலிப்பதாக உள்ளது.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்