‘மனைவியை கிண்டல் செய்ததால் வாலிபரை குத்தி கொன்றேன்’-உறவினருடன் கைதானவர் போலீசில் வாக்குமூலம்

மனைவியை கிண்டல் செய்ததால் வாலிபரை குத்தி கொன்றதாக உறவினருடன் கைதானவர் போலீசில் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

Update: 2021-08-01 18:27 GMT
தேவகோட்டை,

மனைவியை கிண்டல் செய்ததால் வாலிபரை குத்தி கொன்றதாக உறவினருடன் கைதானவர் போலீசில் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வாலிபர் படுகொலை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள செலுகை கிராமத்தை சேர்ந்த வேலு மகன் தென்னரசு(வயது 22). பக்கத்து கிராமமான சிவனூரை சேர்ந்தவர் மணிகண்டன்(40). இவர்கள் 2 பேரும் பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு ஓட்டி வந்தனர். இதனால் இருவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தென்னரசு, அவரது அண்ணன் காளிதாஸ், நண்பர்கள் இளங்குளம் கணேசன், குருப்புலி சுரேஷ் ஆகியோர் செலுகையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மணிகண்டன் மற்றும் அவரது உறவினர் பெத்து (35) ஆகியோர் இவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் இருதரப்பினரும் மோதி கொண்டனர். இந்த சம்பவத்தில் தென்னரசு கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். மற்ற 3 பேருக்கும் கத்திக்குத்து விழுந்தது. உடனே அங்கிருந்து மணிகண்டன், பெத்து ஆகியோர் தப்பி ஓடி விட்டனர்.

மனைவியை கிண்டல் செய்ததால்..

படுகாயம் அடைந்த மற்ற 3 பேரும் திருவாடானை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். கொலை செய்யப்பட்ட தென்னரசு உடலை கைப்பற்றிய தேவகோட்டை தாலுகா போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிைலயில் கொலை வழக்கு தொடர்பாக தப்பி ஓடிய மணிகண்டன், பெத்துவை போலீசார் கைது செய்தனர். போலீசில் பெத்து அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் ஏற்கனவே திருமணமான பெண்ணை திருமணம் செய்து இருந்ததால் தென்னரசுவும், அவரது நண்பர்களும் கிண்டல் செய்து வந்தனர். சம்பவத்தன்று இதை எனது அக்காள் தட்டி கேட்டார். இதில் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த நான், உறவினர் மணிகண்டனுடன் சேர்ந்து மனைவியை கேலி செய்த ஆத்திரத்தில் தென்னரசுவை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டோம். தடுக்க வந்தவர்களையும் கத்தியால் தாக்கி விட்டு தப்பி விட்டோம் என்று கூறி இருந்தார். இதையடுத்து கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்