வங்கியில் இருந்து பேசுவதாக ஏமாற்றி ரகசிய குறியீட்டு எண்ணை வாங்கி லட்சக்கணக்கில் மோசடி; டெல்லி ஆசாமிகள் கைது

வங்கியில் இருந்து பேசுவதாக ஏமாற்றி, வாடிக்கையாளரின் ரகசிய குறியீட்டு எண்ணை வாங்கி, லட்சக்கணக்கில் மோசடி செய்த டெல்லி ஆசாமிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-08-02 04:03 GMT
மீண்டும், மீண்டும் மோசடி
வங்கி வாடிக்கையாளர்களிடம் எவ்வளவோ விழிப்புணர்வு பிரசாரம் செய்த போதிலும், மீண்டும், மீண்டும் மோசடி நபர்களின் வஞ்சக வலையில் சிக்கி தங்களது வங்கி கணக்கிலிருந்து பணத்தை இழந்து விடுகிறார்கள். வங்கியில் இருந்து பேசுவதாக சொல்லி, ஏ.டி.எம். கார்டையோ அல்லது கிரெடிட் கார்டையோ புதுப்பித்து தருவதாக கூறினால், வாடிக்கையாளர்கள் தங்களது ரகசிய குறியீட்டு எண்ணை கூறக்கூடாது என்று எவ்வளவோ பிரசாரம் செய்த போதும், வங்கி வாடிக்கையாளர்கள் யாரும் அதை காதில் வாங்குவதாக தெரியவில்லை. மீண்டும், மீண்டும் இது போன்ற மோசடியில் சிக்கி பணத்தை 
இழந்து விட்டதாக போலீசில் புகார் கூறப்படுகிறது. இதுபோன்ற மோசடி வலையை வீசுவது பெரும்பாலும் டெல்லி ஆசாமிகளாகவே உள்ளனர்.

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் இது போன்ற மோசடியில் சிக்கி பணத்தை இழந்து விட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளார். இவரது கிரெடிட் கார்டுக்கு பரிசு விழுந்துள்ளதாகவும், அதற்கு ரகசிய குறியீட்டு எண்ணை கொடுங்கள் என்று மர்ம நபர் ஒருவர் வங்கியில் இருந்து பேசுவது போல பேசியுள்ளார். உடனே கோவிந்தராஜ் தனது கிரெடிட் கார்டின் ஓ.டி.பி.எண்ணை (ரகசிய எண்) கொடுத்துள்ளார். அடுத்த கணமே கோவிந்தராஜின் கிரெடிட் கார்டிலிருந்து ரூ.1 லட்சம் பணத்தை மோசடி நபர்கள் சுருட்டி விட்டனர்.

டெல்லி ஆசாமிகள் 2 பேர் கைது
இந்த மோசடி சம்பவம் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர் நாகஜோதி, உதவி கமிஷனர் பிரபாகரன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள்.மோசடியில் ஈடுபட்டது டெல்லியைச் சேர்ந்த அதுல்குமார் மற்றும் குணால் என்று தெரியவந்தது. தனிப்படை போலீசார் டெல்லி சென்று அவர்கள் இருவரையும் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் மீட்கப்பட்டது. நீதிமன்ற காவலில் அவர்கள் இருவரும் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் இதுபோல நிறைய நபர்களிடம் செல்போனில் பேசி, தமிழகம் மட்டும் அல்லாமல் கேரளாவிலும் நிறைய பேர்களிடம் லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பல மொழிகளிலும் பேசும் வல்லமை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏமாறாதீர்கள்....
பொதுவாக வங்கியில் இருந்து அதிகாரிகள் யாரும் செல்போனில் பேசி வாடிக்கையாளர்களின் ரகசிய குறியீட்டு எண்ணை எதற்காகவும் கேட்கமாட்டார்கள் என்பதை வங்கி வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். யாராவது அவ்வாறு செல்போனில் பேசினால், உடனே தங்களது ரகசிய குறியீட்டு எண்ணை கொடுத்து ஏமாறக் கூடாது என்று, போலீசார் மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்