ஒட்டியம்பாக்கத்தில் 500 ரூபாய் கள்ளநோட்டு தயாரித்த வாலிபர்கள்

சென்னை ஒட்டியம்பாக்கத்தில் உள்ள வீட்டில் 500, 100, 50 ரூபாய் கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை தயாரித்த வாலிபர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-08-02 11:24 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஒட்டியம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் செரில் மற்றும் அவருடைய நண்பர் கார்த்திக் ஆகியோர் கடந்த 3 மாதங்களாக வாடகைக்கு தங்கி உள்ளனர். இவர்களை தேடி 5 பேர் கும்பல் அவர்களது வீட்டுக்கு வந்து தகராறு செய்வதாக மாநகர போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக பெரும்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கனகதாசன், மகுடீஸ்வரி மற்றும் போலீசார் அங்கு சென்றனர். ஆனால் பொதுமக்கள் கூறியபடி அந்த வீட்டில் தங்கி இருந்த 2 வாலிபர்கள் மற்றும் தகராறு செய்ய வந்தவர்கள் என யாரும் அங்கு இல்லை. வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டு அலங்கோலமாக கிடந்தது.

கள்ளநோட்டுகள்

போலீசார் வீட்டின் ஒரு அறையில் சோதனை செய்தனர். அங்கு 500, 100, 50 ரூபாய் நோட்டுகள் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வீட்டில் இருந்து 500 ரூபாய் ஜெராக்ஸ் நோட்டுகள் நூறு, 100 ரூபாய் ஜெராக்ஸ் நோட்டுகள் 25 மற்றும் 50 ரூபாய் ஜெராக்ஸ் நோட்டுகள் 150 ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

இதுதொடர்பாக தலைமறைவாக உள்ள செரில், கார்த்திக் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் சிக்கினால்தான், இருவரும் கள்ளநோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விடமுயற்சி செய்தார்களா? அல்லது ஏற்கனவே புழக்கத்தில் விட்டு உள்ளார்களா?, இதன் பின்னனியில் யார் உள்ளனர்? மர்மநபர்கள் எதற்காக இவர்களை தேடி தகராறு செய்ய வந்தனர்? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்