ராஜ்குந்த்ராவின் லேப்டாப்பில் இருந்து 68 ஆபாச வீடியோக்கள் சிக்கின; ஐகோர்ட்டில் போலீசார் தகவல்

ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் லேப்டாப்பில் இருந்து 68 ஆபாச வீடியோக்கள் சிக்கியதாக ஐகோர்ட்டில் போலீசார் தெரிவித்தனர்

Update: 2021-08-02 22:45 GMT
கோப்பு படம்
மும்பை, 
ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் லேப்டாப்பில் இருந்து 68 ஆபாச வீடியோக்கள் சிக்கியதாக ஐகோர்ட்டில் போலீசார் தெரிவித்தனர்.

ஐகோர்ட்டில் மனு 
சினிமா மற்றும் வெப் தொடர்களில் நடிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி ஆபாச படங்கள் எடுத்தது மற்றும் அதை செல்போன் செயலியில் வெளியிட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ராவை கடந்த 19-ந் தேதி போலீசார் கைது செய்தனர். 

இந்த வழக்கில் மேலும் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 
இந்த நிலையில் தொழில் அதிபர் ராஜ் குந்த்ரா மற்றும் அவரது ஆலோசகர் ரயான் தர்பே இருவரும் தங்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜ்குந்த்ராவுக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பி அவர் கைது செய்யப்படவில்லை என அவரது தரப்பு வக்கீல் குற்றம்சாட்டினார். 

ஆபாசப்படங்கள்
இதற்கு பதில் அளித்த போலீஸ் தரப்பு வக்கீல் அருணா காமட் பாய் கூறியதாவது:-

கைது செய்யப்படுவதற்கு முன் இருவருக்கும் நோட்டீஸ் முறைப்படி வழங்கப்பட்டது. விசாரணையில் அவர்களின் சில வாட்ஸ்அப் தகவல்கள் நீக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சிலவற்றை மட்டுமே மீட்க முடிந்துள்ளது. எவ்வளவு தரவுகள் நீக்கப்பட்டது என்பது தெரியவரவில்லை. அதை மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
குற்றம் சாட்டப்பட்ட நபர் ஆதாரங்களை அழித்தால், விசாரணை நிறுவனம் அதை ஊமையாக பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா?மேலும் ராஜ் குந்த்ரா அலுவலகத்தில் இருந்து அவரது லேப்டாப்பை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதில் 68 ஆபாச வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே அவரது நெட்வொர்க் ஸ்டோரேஜ் ஏரியாவில் இருந்து 51 வீடியோக்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. 

இவ்வாறு அவர் கூறினார். 
சட்டவிரோதமானது
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை ராஜ் குந்த்ராவின் வக்கீல் மறுத்தார். ராஜ் குந்த்ரா எடுத்திருக்கும் படங்கள் பாலுணர்வை தூண்டும் ஆபாச படங்கள் அல்ல, அவை பாலுணர்வை சொல்லும் கலையம்சம் கொண்டவை என்றும், எனவே ஆபாசப் படம் எடுத்திருப்பதாக அவரை கைது செய்திருப்பது சட்டவிரோதமானது என்றும் அவரது வக்கீல் வாதிட்டார். 

இருதரப்பு வாதத்தையும் கேட்ட ஐகோர்ட்டு, ராஜ்குந்த்ராவின் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது. 

மேலும் செய்திகள்