கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம்: கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு கட்டுப்பாடு தமிழக அரசு உத்தரவு

தொற்று அதிகரித்துள்ளதன் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-08-05 12:51 GMT
சென்னை,

‘கடவுளின் தேசம்' என்று அழைக்கப்படும் கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கேரளாவில் இருந்து ரெயில் மூலமாக வருபவர்களுக்கு கோவை ரெயில் நிலையத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது. கேரளாவில் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து தமிழகத்துக்கு வருபவர்களுக்கென்று ஏற்கனவே உள்ள வழிகாட்டி நெறிமுறைகளோடு, கூடுதலாக சில நெறிமுறைகளை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கொரோனா சான்றிதழ்

பொது சுகாதாரத்துறை இயக்குனரின் கோரிக்கையை அரசு கவனமாக பரிசீலித்து, அதனை ஏற்றுக்கொள்வதாக முடிவு எடுத்துள்ளது. இதையடுத்து கொரோனா பரிசோதனை தொடர்பான நெறிமுறைகள் தலைப்பில் ‘ஏ' பிரிவில் திருத்தம் செய்து, கேரளாவில் இருந்து வருபவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என சான்று கட்டாயம் வைத்திருக்கவேண்டும். 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்பது சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.

அதன்படி, கேரளாவில் இருந்து விமானம், கடல், ரெயில் மற்றும் சாலை மார்க்கமாக வரும் அனைவரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அங்கீகரித்த பரிசோதனை கூடத்தில் பரிசோதனை செய்து கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இந்த சான்றிதழ் பயணம் தொடங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பு எடுத்திருக்க வேண்டும். இதேபோல கொரோனா தடுப்பூசி 2 தவணையும் செலுத்தியதற்கான சான்றிதழ் காண்பிக்க வேண்டும். கொரோனா ‘நெகட்டிவ்' சான்றிதழ் அல்லது தடுப்பூசி 2 தவணை செலுத்தியதற்கான சான்றிதழ் இவை இரண்டையும் வைத்திருக்க வேண்டும்.

திருத்தப்பட்ட இந்த புதிய உத்தரவு விமான நிலைய இயக்குனர்கள், அரசு துறைகளை சேர்ந்த செயலாளர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்