கோவில் கொடை விழாவில் தகராறு; ஒருவருக்கு கத்திக்குத்து

ஆத்தூர் அருகே கோவில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-08-05 14:14 GMT
ஆறுமுகநேரி:
ஆத்தூர் அருகே கோவில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
 
கொடை விழா

தெற்கு ஆத்தூர் அருகே நரசன்விளை கண்ணகி தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் அருள்குமார் (வயது 55). இவர் கடந்த 5 ஆண்டுகளாக நரசன்விளை ஊர் தலைவராக இருந்துள்ளார். அங்குள்ள சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழாவில் அருள்குமார் குடும்பத்தினரே பரம்பரை பரம்பரையாக கிடாவெட்டுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்த ஆண்டும் அதே போல் கோவில் கொடை விழாவில் அருள்குமார் பரம்பரையினர் கிடா வெட்டுவதற்கு தயாராக இருந்தனர். 

ஆனால் அதே பகுதியை சேர்ந்த சின்னத்துரை மகன் விக்னேஷ் (23) என்பவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்துள்ளார்.

கத்திக்குத்து

அப்போது அங்கிருந்த ஊர் முக்கிய பிரமுகர்கள் விக்னேசை கண்டித்து உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ், அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். அப்போது அங்கு நின்றவர்கள் சிலர் மிரண்டு ஓடி உள்ளனர். அதில் அருள்குமார் கால் இடறி கீழே விழுந்து விட்டார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய விக்னேஷ் திடீரென அருள்குமார் முதுகில் ஏறி அமர்ந்து கொண்டு கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. அங்கு நின்றவர்கள் சத்தம் போடவே விக்னேஷ் தப்பி ஓடிவிட்டார். இதன்பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அருள்குமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

கைது

 இதுகுறித்து அருள்குமாரின் மகன் பார்த்திபன் கொடுத்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆத்தூர் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி விக்னேசை கைது செய்தார். பின்னர் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்