ஆழியாறு அணை நீர்மட்டம் 110 அடியை எட்டியது

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஆழியாறு அணை நீர்மட்டம் 110 அடியை எட்டியது. எனவே கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-08-05 16:38 GMT
பொள்ளாச்சி

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஆழியாறு அணை நீர்மட்டம் 110 அடியை எட்டியது. எனவே கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

ஆழியாறு அணை

பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஆழியாறு அணை உள்ளது. 120 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 24-ந் தேதி அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. 

110 அடியை எட்டியது 

தொடர்ந்து அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

மேலும் அணை விரைவில் நிரம்ப உள்ளதால் ஆற்றின் கரையோர பகுதியை சேர்ந்தவர் களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.  இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஆழியாறு அணை நீர்மட்டம் 110.30 அடியாக உயர்ந்தது. வினாடிக்கு 819 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 199 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

வெள்ள அபாய எச்சரிக்கை 

அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டு உள்ளது. தொடர்ந்து அணைக்கு வரும் நீர்வரத்தை கண்காணித்து வருகிறோம். 

அணை நீர்மட்டம் 115 அடியை எட்டியதும், 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் படும்.  இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்