15 கலைஞர்கள் விருதுக்கு தேர்வு

தேனி மாவட்டத்தில் 15 கலைஞர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-06 15:29 GMT
தேனி: 

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையில் கலை பண்புகளை மேம்படுத்தவும், கலைஞர்களை சிறப்பிக்கும் வகையிலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் கலெக்டர் தலைமையில் செயல்பட்டு வரும் மாவட்ட கலை மன்றங்கள் வாயிலாக வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. 

அதன்படி, தேனி மாவட்டத்தில் 2016-17, 2017-18, 2018-19 ஆகிய ஆண்டுகளுக்கான விருதுக்கு சிறந்த கலைஞர்கள் 15 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருதுகளின் பெயர் மற்றும் அதற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் (அடைப்புக்குறிக்குள் கலை பிரிவு) விவரம் வருமாறு:-
கலை இளமணி விருதுக்கு ஆர்.சரண் விவிக்சா (பரதம்), தீக்சினா (பரதம்), மோகன்ராஜ் (தேவராட்டம்), கலை வளர்மணி விருதுக்கு திருநாவுக்கரசு (சிலம்பாட்டம்), செல்வக்குமார் (பல்சுவை கலைஞர்), கருப்பசாமி (நாதஸ்வரம்), கலை சுடர்மணி விருதுக்கு அழகுமலை (தப்பாட்டம்), மகபூப்பேகம் (பரதம்), கண்ணன் (சிற்பம்), கலைநண்மணி விருதுக்கு மீனாட்சி (கரகம்), செந்தில்குமார் (ஓவியம்), அழகர்சாமி (பபூன்), கலை முதுமணி விருதுக்கு சின்னசாமி (தவில்), அன்புச்செல்வம் (தேவராட்டம்), கணபதி (நாடகம்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருதுக்கான பொற்கிழி, பட்டயம், பொன்னாடை வழங்கி கவுரவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்