ஜி.எஸ்.டி. இழப்பீட்டை மத்திய அரசு வழங்கவேண்டும்

ஜி.எஸ்.டி. இழப்பீட்டை மத்திய அரசு வழங்கவேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தினார்.

Update: 2021-08-06 19:11 GMT
புதுச்சேரி, ஆக.7-
வணிகத்தை மேம்படுத்த சென்னை, புதுச்சேரி காரைக்காலை இணைத்து கப்பல் போக்குவரத்தை ஊக்கப்படுத்த வேண்டும், ஜி.எஸ்.டி. இழப்பீட்டை மத்திய அரசு வழங்கவேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தினார்.
குறைந்த அளவு நிதி
நிதி ஆயோக் குழுக்கூட்டம் காணொலி காட்சி மூலம் நேற்று நடந்தது. இதில் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி, தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும் துறை செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ரங்கசாமி பேசியதாவது:-
புதுவைக்கான மத்திய அரசின் நிதியுதவி இதுவரை ஒரே நிலையாகவே இருந்து வந்துள்ளது. 2021-22-ம் நிதியாண்டிலும் 1.58 சதவீதமாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மிகக்குறைந்த அளவான 4 முதல் 5 சதவீதம் என்ற அளவிலேயே இருந்து வருகிறது.
நிதிக்குழுவில் சேர்க்கவில்லை
புதுவை யூனியன் பிரதேசமானது, மத்திய நிதிக்குழுவிலோ அல்லது யூனியன் பிரதேசங்களுக்கான நிதிக்குழுவிலோ சேர்க்கப்படவில்லை. எனவே புதுவை யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் நலத்திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசானது உரிய வழிமுறைகளை ஆராய்ந்து நிதி வழங்க ஆவன செய்யவேண்டும்.
மத்திய அரசானது அதன் திட்டங்களை நிறைவேற்ற 60:40 என்ற சதவீதத்தில் நிதி வழங்குகிறது. இதை 2016-ம் ஆண்டுக்கு முன்பு இருந்ததைப்போல 90:10 என்ற சதவீதத்தில் வழங்கவேண்டும்.
ஜி.எஸ்.டி. இழப்பீடு
தற்போது ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்த பிறகு புதுச்சேரிக்கு வருவாய் வெகுவாக குறைந்துள்ளது. மத்திய அரசு வழங்கும் ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) இழப்பீடும் குறைந்துள்ளது. இதை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
மேலும் சுற்றுலாவை மேம்படுத்த விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த மத்திய அரசு நிதியுதவி வழங்கவேண்டும். வர்த்தகம் மற்றும் வணிகத்தை மேம்படுத்த சென்னை, புதுச்சேரி மற்றும் காரைக்காலை இணைத்து கடலோர கப்பல் சேவையை ஊக்கப்படுத்த வேண்டும்.
புதுச்சேரி யூனியன் பிரதேச காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு டெல்லியைப்போல் ஓய்வூதியம் வழங்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்