கொரோனாவை தடுக்க கர்நாடகத்தில் புதிய கட்டுப்பாடுகள்

கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலையை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். அதன்படி மைசூரு, குடகு, சாம்ராஜ்நகர் உள்பட 8 மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கை அமல்படுத்தவும், மாநிலம் முழுவதும் இரவு 9 மணிக்கே கடைகளை மூடவும் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-08-06 21:43 GMT
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
 பெங்களூரு: கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலையை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். அதன்படி மைசூரு, குடகு, சாம்ராஜ்நகர் உள்பட 8 மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கை அமல்படுத்தவும், மாநிலம் முழுவதும் இரவு 9 மணிக்கே கடைகளை மூடவும் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா 3-வது அலை

கர்நாடகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2-வது அலை தொடங்கி கோர தாண்டவமாடியது. இதனால் ஏப்ரல், மே மாதங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்து பதிவாகி வந்தது. அதுபோல் பலியும் ஆயிரத்தை தாண்டி பதிவாகியது. 

தற்போது 2-வது அலையின் தீவிரம் குறைந்துவிட்டது. தினசரி பாதிப்பு 2 ஆயிரத்திற்கு கீழ் பதிவாகி வருகிறது. ஆயினும் இது இன்னும் முழுமையான அளவில் கட்டுக்குள் வரவில்லை. இருப்பினும் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டது. அதாவது இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் இரவு 10 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் பெங்களூரு மாநகர், தட்சிண கன்னடா, குடகு, மைசூரு, ஹாசன் போன்ற மாவட்டங்களில் பாதிப்பு 100-க்கும் மேல் பதிவாகி வருகிறது. கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

ஆலோசனை கூட்டம்

இது கொரோனா 3-வது அலையின் முன்னோட்டமாக இருக்குமோ என்ற அச்சம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நடைபெற்றது.

 இதில் உயர் அதிகாரிகள், கொரோனா 3-வது அலை தடுப்பு ஆலோசனை குழு தலைவர் டாக்டர் தேவி பிரசாத் ஷெட்டி, உறுப்பினர்கள் மஞ்சுநாத், ரவி, சுதர்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வார இறுதி ஊரடங்கு

இந்த கூட்டத்தில், கொரோனா 3-வது அலையை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலையை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மருத்துவ ஆலோசனை குழு மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். அதன்படி கேரளா மற்றும் மராட்டிய மாநில எல்லையில் அமைந்துள்ள 8 மாவட்டங்களில் மீண்டும் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

அதாவது கேரளா எல்லையில் உள்ள மைசூரு, குடகு, சாம்ராஜ்நகர், தட்சிண கன்னடா ஆகிய மாவட்டங்களிலும், மராட்டிய எல்லையில் உள்ள பெலகாவி, விஜயாப்புரா, கலபுரகி, பீதர் ஆகிய 8 மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

அனைத்து கடைகளும் மூடல்

மாநிலத்தில் தற்போது இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் உள்ளது. இந்த இரவுநேர ஊரடங்கு இரவு 9 மணி முதலே அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இரவு 9 மணிக்கு முன்பே அனைத்து வியாபார நிறுவனங்களும் மூடப்பட வேண்டும். இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகின்றன. அடுத்த உத்தரவு வரும் வரை இந்த நிலை தொடரும். 

கொரோனா தடுப்பு செயல்படை அமைக்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. இன்னும் ஓரிரு நாளில் மந்திரிகள் அடங்கிய செயல்படை அமைக்கப்படும். 
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ்

ஏற்கனவே கேரளா, மராட்டியத்தில் இருந்து கர்நாடகம் வருவோர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் 72 மணி நேரத்திற்கு முன்பாக ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்த கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்