களக்காட்டில் மின்வேலியில் சிக்கி விவசாயி பலி

களக்காட்டில் மின்வேலியில் சிக்கி விவசாயி பலியானார்.

Update: 2021-08-06 22:11 GMT
களக்காடு:
களக்காடு நகர தெருவைச் சேர்ந்தவர் பழனிகுமார் (வயது 52). விவசாயியான இவருக்கு சொந்தமான தோட்டம், களக்காடு வனத்துறை அலுவலகம் அருகில் உள்ள வண்ணான்திரடு பகுதியில் உள்ளது. அங்கு வாழை பயிரிட்டு இருந்தார்.
அந்த தோட்டத்துக்குள் வனவிலங்குகள் புகுந்து சேதப்படுத்தாத வகையில், சுற்றிலும் கம்பிவேலி அமைக்கப்பட்டு இருந்தது. அதில் மின்சாரமும் பாய்ச்சப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் பழனிகுமார் தனது தோட்டத்துக்கு சென்றார். அப்போது அவர் கம்பிவேலியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். அதில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததால், பழனிகுமார் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், களக்காடு போலீசார் விரைந்து சென்று, பழனிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து களக்காடு நகர்ப்புற மின்வாரிய உதவி பொறியாளர் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பழனிகுமாருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

மேலும் செய்திகள்