ஊத்தங்கரை அருகே மரத்தில் கார் மோதி பெண் உள்பட 2 பேர் பலி-விபத்தில் சிக்கிய உறவினரை பார்த்து விட்டு திரும்பியபோது பரிதாபம்

ஊத்தங்கரை அருகே மரத்தில் கார் மோதியதில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். விபத்தில் சிக்கிய உறவினரை பார்த்து விட்டு திரும்பியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

Update: 2021-08-09 17:04 GMT
கல்லாவி:
கார் விபத்து
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள வெங்கடதாம்பட்டியை சேர்ந்தவர் ரகு (வயது 50). ஜவுளி வியாபாரி. அதேபகுதியை சேர்ந்தவர்கள் தேவராஜ் மனைவி பேபி (55), சரவணன் மனைவி கவுரி (40), பழனி (47). இவர்கள் அனைவரும் உறவினர்கள் ஆவர். தர்மபுரியை சேர்ந்த இவர்களது உறவினர் ஒருவர் விபத்தில் சிக்கி அங்குள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் ரகு, பேபி, கவுரி, பழனி ஆகிய 4 பேரும் ஒரு காரில் தர்மபுரிக்கு சென்றனர். உறவினரை பார்த்து நலம் விசாரித்து விட்டு அவர்கள் 4 பேரும் அங்கிருந்து ஊத்தங்கரை நோக்கி திரும்பி கொண்டிருந்தனர். காரை பழனி ஓட்டி வந்தார். 
ஊத்தங்கரையை அடுத்த வீரியம்பட்டி கூட்டு ரோட்டில் சென்ற போது, கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது கண் இமைக்கும் நேரத்தில் சாலையோரம் இருந்த புளிய மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
2 பேர் பலி
இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி ரகு, பேபி, கவுரி ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். பழனி லேசான காயம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள், அவர்கள் 4 பேரையும் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதில் ரகு, பேபி, கவுரி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். 
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு ரகு, பேபி ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். கவுரிக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
சோகம்
இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீசார் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ரகு, பேபி ஆகியோரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் சிக்கிய உறவினரை பார்க்க சென்று விட்டு திரும்பி வந்தபோது, மரத்தில் கார் மோதியதில் பெண் உள்பட 2 பேர் பலியான சம்பவம் வெங்கடதாம்பட்டியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்