மாங்காட்டில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றிவிட்டு புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு தகவல்

மாங்காட்டில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றிவிட்டு அந்த இடத்தில் புதிய பஸ் நிலையம், பயணிகள் நிழற்குடை அமைக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Update: 2021-08-10 09:26 GMT
சென்னை,

சென்னையை அடுத்த மாங்காடு காமாட்சியம்மன் கோவில் மேம்பாடு குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேற்று நேரடியாக ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி மாங்காடு காமாட்சியம்மன் கோவில் மற்றும் வைகுண்டப்பெருமாள் வகையறா கோவிலுக்குச் சொந்தமான சுமார் 8 ஏக்கர் நிலத்தில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் புதிய பஸ் நிலையம், பயணிகள் நிழற்குடை அமைக்கப்படும்.

அந்த இடத்தில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றிட வரைவுத்திட்டம் தயார் செய்து, எப்பொழுதும் கழிவுநீர் நிற்காதவாறு நிலத்தினை மேம்படுத்துமாறு பக்தர்கள் சார்பாக 2017-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அதன்பேரில் திட்ட வரைவு தயார் செய்யப்பட்டு போதிய நிதி ஆதாரம் இல்லாததால் 2018-2019-ம் ஆண்டில் செய்து முடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 4 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இப்பணிகளை முடிக்கப்படதாதால் தற்போதைய நிலைக்கேற்ப சாத்திய கூறுகள் ஆராய்ந்து அதன் அடிப்படையில் வரைப்படம் தயார் செய்து ஒரு மாத காலத்துக்குள் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்குமாறு மாவட்ட கலெக்டர் மற்றும் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. கோவிலையும் தூய்மையாக பராமரித்து குடிநீர் வசதி ஏற்படுத்தி தருமாறு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி, செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., மாங்காடு காமாட்சியம்மன் கோவில் பரம்பரை தர்மகர்த்தா மணலி ஆர்.சீனிவாசன், இணை கமிஷனர் கே.ரேணுகாதேவி, கோவில் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்