கந்து வட்டி வாங்கினால் உரிமம் ரத்து

சட்டத்தை மீறி கந்து வட்டி வாங்கினால் அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2021-08-10 18:52 GMT
கரூர்

விழிப்புணர்வு முகாம்
மாவட்ட காவல்துறை சார்பில் கந்துவட்டி ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் மறுவாழ்வு முகாம் கரூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நகர துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் வரவேற்றார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 
மகளிர் சுயஉதவி குழுக்கள்
குறைந்தபட்ச வட்டியுடன் கடன் கொடுப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள், வங்கிகள் தயாராக உள்ளன. தமிழகத்தில் அதிகமான மகளிர் சுயஉதவி குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு அவைகள் திறம்பட செயல்பட்டு வருகிறது. இத்தகைய வாய்ப்புகளை நாம் நல்லபடியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். 
நமக்காக அரசு பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களை முறையாக பயன்படுத்தும்போது தேவையில்லாத நபர்களிடம் சென்று நாம் கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
3 பேர் கைது
ரிசர்வ் வங்கி, நிதி நிறுவனங்களுக்கு வட்டி நிர்ணயம் செய்துள்ளது. அந்த வட்டியை விட அதிக வட்டி கேட்கக்கூடிய நிதி நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். கடந்த ஒரு மாதத்தில் என்னிடம் கொடுக்கப்பட்ட 11 புகார் மனுக்கள் மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது. அதில் 3 நபர்களை கைது செய்துள்ளோம். மற்றவர்கள் சட்டத்தை மீறி கந்து வட்டி வாங்கியிருந்தால் அவர்களது உரிமம் ரத்து  செய்யப்படும். அதற்காக மாவட்ட கலெக்டர் குழுக்களை அமைத்து உள்ளார். சட்டப்படியான நிவாரணங்கள் நிச்சயமாக அரசிடம் இருந்து, காவல்துறையிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும்.
வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் நாம் சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால், நம்முடைய தேவையை அறிந்து செயல்பட்டால், தேவையில்லாத பிரச்சினைகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ளமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக் குமார் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்