அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள் அகற்றம்

கொடைக்கானல் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

Update: 2021-08-13 13:08 GMT
கொடைக்கானல்: 

கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணாசாலையில் பஸ்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்நிலையத்தில் தனியார் கார், வேன்கள் நிறுத்தப்படுகின்றன. 

இதனால் அரசு மற்றும் தனியார் பஸ்களை நிறுத்துவதற்கு இடையூறு ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மேலும் பஸ்நிலையம் மற்றும் நகர் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. 

இதனை அகற்ற வேண்டும், பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும் தனியார் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் நாராயணனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆணையாளர் உத்தரவின்படி, நகரமைப்பு அலுவலர் அப்துல்நாசர், ஆய்வாளர் பார்த்தசாரதி, சுகாதார ஆய்வாளர் (பொறுப்பு) சுப்பையா ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் பஸ்நிலையத்தில் நிறுத்தியிருந்த தனியார் வாகனங்களை அகற்றும்படி டிரைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். உடனே அங்கு இருந்த தனியார் வாகனங்களை டிரைவர்கள் வேறு பகுதிக்கு எடுத்து சென்றனர். பின்னர் அண்ணாசாலை, 7 ரோடு சந்திப்பு, ஏரிச்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆக்கிரமித்து அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

 
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் நாராயணனிடம் கேட்டபோது, நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளன. சாலைகளை ஆக்கிரமித்து பலர் கடைகளை அமைத்துள்ளனர். விரைவில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற உள்ளது என்றார். 

மேலும் செய்திகள்