மீஞ்சூர் பேரூராட்சியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

மீஞ்சூர் பேரூராட்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து முககவசம் அணியாதவர்களிடம் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தார்.

Update: 2021-08-18 09:33 GMT
மீஞ்சூர்,

மீஞ்சூர் பேரூராட்சியில் 18 வார்டுகளில் குடிநீர் பணிகள், கழிவுநீர் கால்வாய் பணிகள் உள்பட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவிஇயக்குனர் கண்ணன் திடீரென பேரூராட்சிக்கு நேரில் வருகை தந்து பார்வையிட்டு பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.

மீஞ்சூர் பேரூராட்சியில் அடங்கிய வேளாளர் தெரு, அய்யப்பன் கோவில் தெரு, காந்தி ரோடு போன்ற இடங்களில் குடிநீர் பகுதிகளில், கழிவுநீர் கால்வாய் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பணியாளர்களிடம் பொதுமக்கள் கூறும் புகார்களுக்கு இடமளிக்காமல் விரைந்து பணிகள் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அபராதம்

பின்னர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக முககவசம் அணியாதவர்களை அடையாளம் கண்டு 30 பேருக்கு அபராதம் விதித்தார். மீஞ்சூர் பஜாரில் உள்ள கடைகளை பார்வையிட்டு பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அபராதம் விதித்தார். அப்போது பிளாஸ்டிக் கவரை மூட்டைகளில் கட்டி விற்பனைக்காக கொண்டு வந்த வியாபாரியிடம் 25 கிலோ பிளாஸ்டிக் கவரை பறிமுதல் செய்தார். அப்போது ரூ.6 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து சாலையில் பெற்றோர்களுடன் முககவசம் அணிந்து செல்லும் சிறுவர், சிறுமிகளை பாராட்டி திருக்குறள் புத்தகம், நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை பரிசாக வழங்கினார்.

இதனை தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி செய்முறை பயிற்சி அளித்தார்.

இந்த திடீர் ஆய்வின்போது பேரூராட்சிகளின் பொறியாளர் முத்து, செயல் அலுவலர் பாஸ்கரன், மேற்பார்வையாளர் ஆனந்தன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்