பெற்றோர் ஆட்டுக்குட்டி வாங்கித்தராததால் பள்ளி மாணவர் தற்கொலை

பெற்றோர் ஆட்டுக்குட்டி வாங்கித்தராததால் பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-08-20 01:34 GMT
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள தெற்கு மாதவி கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ். விவசாயி. இவரது மகன் கவுதம்(வயது 11). இவர் சிறுவாச்சூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். கவுதமின் தாய் அந்த கிராமத்தில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கொரோனா தொற்று ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் வீட்டில் இருந்து வந்த கவுதம், வளர்ப்பதற்காக ஆட்டுக்குட்டி வாங்கி தருமாறு தனது பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் ஆட்டுக்குட்டி வாங்கி தரவில்லை.
இதையடுத்து ஆட்டுக்குட்டி வாங்கித்தருமாறு கேட்டு கவுதம் பிடிவாதமாக இருந்ததாகவும், அவரை பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கவுதம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது தாயாரின் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் அங்கு வந்து கவுதமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்