நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று இன்று முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதாக அறிவித்துள்ளனர்.

Update: 2021-08-20 15:42 GMT
நாகப்பட்டினம்:
தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று இன்று முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதாக அறிவித்துள்ளனர்.
வேலை நிறுத்தம்
 நாகை மீன்பிடி துறைமுகத்தில் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் கடந்த 14-ந் தேதி நடைபெற்றது. அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 3 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், 20-ந்தேதிக்குள் (நேற்று) நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் கூட்டததில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை தொடா்ந்து நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று 7-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 ஆயிரத்து 500 விசைப்படகுகள், 7 ஆயிரம் பைபர் படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால், பல கோடி ரூபாய் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில் தடைசெய்யப்பட்ட சுருக்கு மடி, இரட்டைமடி வலைகளை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மீனவர்களிடம் நேற்று மாலை நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் அருண் தம்புராஜை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்னர் மீனவர்கள் கூறியதாவது:-
நாங்கள் நேற்று முன்தினம் சென்னைக்கு சென்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அதற்கு அமைச்சர், தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
போராட்டம் வாபஸ்
இதையடுத்துநாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதி அளித்தார். இதன் காரணமாக வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று நாளை (இன்று) (சனிக்கிழமை) முதல் மீ்ன்பிடிக்க கடலுக்கு செல்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்