ஊராட்சி தலைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.

Update: 2021-08-21 22:04 GMT
வி.கைகாட்டி:
அரியலூரை அடுத்த கயர்லாபாத் கிராமத்தை சேர்ந்த நிலமற்ற மக்கள் சிலர், தங்களுக்கு இலவச வீட்டு மனை கேட்டு ஊராட்சித் தலைவர் சவுந்தர்ராஜனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதற்கு அவர், தங்களது கோரிக்கை குறித்து, மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து, ஆக்கிரமித்தவர்களிடம் இருந்து நிலத்தை மீட்டு, அந்த நிலத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.அதன்படி, சிலர் ஆக்கிரமித்துள்ள நிலங்களை, அரசு அலுவலர்கள் நேற்று பார்வையிட்டனர். அப்போது நிலத்தை ஆக்கிரமித்துள்ள நபர்களுக்கும், ஊராட்சி தலைவர் சவுந்தர்ராஜனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள், ஊராட்சி தலைவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள், ஊராட்சித் தலைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நேற்று இரவு கல்லங்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த கயர்லாபாத் போலீசார் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்