வாலாஜா அருகே; அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

வாலாஜா அருகே அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-24 18:48 GMT
காவேரிப்பாக்கம்

வாலாஜா அருகே அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

அடிப்படை வசதிகள்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் அம்மனந்தாங்கல் காலனி உள்ளது.

இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளான கழிவுநீர் கால்வாய், சாலை வசதி, குடிநீர் வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அம்மனந்தாங்கல் பகுதியில் பஜனை கோவில் தெரு, ரோட்டு தெரு ஆகிய தெருக்களுக்கு கழிவுநீர் கால்வாய் உள்ளது.

 ஆனால் கால்வாயில் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. மேலும் பள்ளி தெரு, உரைகிணறு தெரு, நடு தெருவில் ஆகிய தெருக்களில் கழிவு நீர் கால்வாய் இல்லாமல் ரோட்டின் மேல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. 

கழிவுநீர் தேங்கி நிற்பதால் கிராம பகுதியில் உள்ள குழந்தைகள், பொதுமக்களுக்கும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு டெங்கு மலேரியா போன்ற நோய் பரவும் அபாயநிலை உள்ளது. 

இதுகுறித்து பலமுறை வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலரிடமும்,  கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாளில் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

சாலை மறியல்

இந்த நிலையில் அம்மனந்தாங்கல் கிராம மக்கள் கடந்த 20-ந்தேதி  வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து மனு அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அம்மனந்தாங்கல் பொதுமக்கள்  50-க்கும் மேற்பட்டோர் வாலாஜா- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு  சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாலாஜா இன்ஸ்பெக்டர் காண்டீபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், வெங்கட்ராமன், கோபி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 

மேலும் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்